Published : 17 Jun 2015 08:51 AM
Last Updated : 17 Jun 2015 08:51 AM

குற்றாலத்தில் சாரலுடன் சீஸன் தொடங்கியது: பேரருவியில் தண்ணீர் கொட்டுகிறது

குற்றாலத்தில் சாரல் மழையுடன் சீஸன் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கம் குறைந்து சாரல் பெய்வதுடன், பேரருவியில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந் துள்ளது திருக்குற்றாலம். பசுமை யான மலைத்தொடரும், அடர்ந்த வனங் களும், அரிய வகை வனவிலங்குக ளும் நிறைந்த இடம். பல்வேறு வகை யான மூலிகைகள் கலந்துவரும் தண்ணீரில் நீராடுவது உடலுக்கு ஆரோக்கியமானதாகக் கருதப் படுகிறது.

தென்மேற்குப் பருவ மழைக் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் பூத்தூறலாக பொழியும் சாரல் மழையிலும், கொட்டும் அருவிகளிலும் உடலை நனைக்க, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். இம்மூன்று மாதங்களே சீஸன் காலம்.

தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். அப்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடி கோயிலுக்குச் செல்வர்.

வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவக்காற்று வீசத் தொடங்கியதுமே சீஸன் ஆரம்பமாகிவிடுகிறது. தென்மேற்குப் பருவமழை உச்சத்தில் இருக்கும்போது அருவிகளில் அளவுக்கதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டும். அப்போது வீசும் தென்றல் காற்றும், சாரலும் குற்றாலத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரம்மியமான சூழலை கொடுக்கும்.

நடப்பாண்டு கடந்த 2 வாரமாக சீஸன் தொடங்காமல் ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து தென்மேற்குப் பருவக்காற்று வீசுகிறது. நேற்று காலையில் அருவிப் பகுதிகளில் லேசான சாரல் விழுந்தது. பேரருவியில் குளிக்கும் அளவுக்கு தண்ணீர் விழுந்தது.

மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் அருவிகளில் தண்ணீர் விழுந்து சீஸன் தொடங்கிவிடும் என்று இங்குள்ள வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x