Published : 24 Jun 2015 07:24 AM
Last Updated : 24 Jun 2015 07:24 AM

என்எல்சி தொழிலாளர் ஊதிய உயர்வு: சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக என்எல்சி நிர்வாகம் சென்னையில் நேற்று நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

நெய்வேலி அனல்மின் நிலைய (என்.எல்.சி.) ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்று ஒப்பந்தம் மூலம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2007-ல் போடப்பட்ட ஒப்பந்தம், 2011 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய ஒப்பந்தம் தொடர்பாக என்எல்சி நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், இதுவரை ஒப்பந்தம் ஏற்படவில்லை.

இதற்கிடையே, என்எல்சி நிர்வாகம் இடைக்கால நிவாரணம் வழங்கியது. ஆனால், சலுகைகள் எதுவும் அதில் இடம்பெறவில்லை. இதையடுத்து, தொழிற்சங்கள் மீண்டும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், கடந்த 18-ம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸை தொழிற்சங்கங்கள் வழங்கின.

இதையடுத்து, என்எல்சி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. சென்னை சாஸ்திரிபவனில் உள்ள மண்டல தொழிலாளர் ஆணையர் சேகர் முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், என்எல்சி அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் சார்பில் 25 சதவீத ஊதிய உயர்வு கோரப்பட்டது. ஆனால், நிர்வாகத் தரப்பில் 10 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை ஏற்க தொழிற்சங்கத்தினர் மறுத்துவிட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக ‘தி இந்து’விடம் என்எல்சி தொமுச பொதுச்செயலாளர் எஸ்.ராஜவன்னியன் தெரிவித்தார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 2-ம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x