Published : 23 Jun 2015 07:33 PM
Last Updated : 23 Jun 2015 07:33 PM

ஆந்திரா துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் கடனுதவி கேட்டு ஆட்சியரிடம் மனு

ஆந்திரா துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்த தருமபுரி சித்தேதி மலை கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர், தொழில் தொடங்க வங்கிக் கடன் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழக தொழிலாளர்கள் 20 பேரை அம்மாநில காவல்துறை சுட்டுக் கொன்றது. இந்த சம்பவத்தில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் சித்தேரி மலைக் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அரசநத்தம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

இதுதவிர சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட பலர் செம்மரம் கடத்த முயன்றதாகக் கூறி ஆந்திரா மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மலைப்பகுதியில் நிரந்தர வாழ்வாதாரம் இல்லாத நிலையில் பிழைப்பு தேடி செல்லும் ஆண்கள் தரகர்களின் சூழ்ச்சியால் செம்மரம் வெட்டச் சென்று ஆபத்தில் சிக்குகின்றனர். எனவே தங்களுக்கு மாற்று வாழ்வாதாரம் செய்து தர வேண்டும் என்று சித்தேரி கிராம பெண்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஏற்கெனவே தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் இவர்கள் 2 முறை மனு அளித்துள்ளனர். குறிப்பாக இவர்கள் தாட்கோ மூலம் ஆடு வளர்ப்புக்கான கடனுதவி வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் வங்கி தரப்பில் கடனுதவி வழங்குவதில் தாமதம் நிலவி வருகிறது.

நேற்றும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட கிராம பெண்கள் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x