Published : 03 Jun 2015 07:58 AM
Last Updated : 03 Jun 2015 07:58 AM

கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக பிஆர்பி மகனிடம் ஆட்சியர் விசாரணை: ரூ.13,448 கோடி அபராதம் விதிக்கப்பட்டதற்கு விளக்கம்

குவாரிகளில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ரூ.13,448 கோடி அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக ஆட்சியர் நடத்திய விசாரணையில் முதல்முறையாக பி.ஆர்.பழனிச்சாமியின் மகன் ஆஜரானார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து சட்ட ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தனியாக விசாரணை நடத்தி வருகிறார். முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததற்காக 83 குவாரி உரிமையாளர்களுக்கு ஆட்சியர் ரூ.13,448 கோடி அபரா தம் விதித்துள்ளார்.

இதை எதிர்த்து குவாரி உரிமை யாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால், 2 மாதத்தில் ஆட்சியர் முன் குவாரி உரிமையாளர்கள் ஆஜராகவும், சட்டத்துக்குட்பட்டு ஆட்சியர் முடிவு எடுக்கும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து குவாரி உரிமை யாளர்களிடம் ஆட்சியர் இரண்டா வது கட்டமாக நேற்று முதல் விசாரணை நடத்தி வருகிறார். ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற விசாரணைக்காக பிஆர்பி குவாரி உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமியின் மகன் செந்தில் குமார், மற்ற குவாரிகளின் உரிமை யாளர்கள் பி.ராஜசேகர், பெரிய கருப்பன், பெரியசாமி உள் ளிட்டோர் ஆட்சியர் இல.சுப்பிரமணி யன் முன் நேற்று ஆஜராயினர்.

ஆட்சியரிடம் அளித்த விளக்கம் குறித்து குவாரி உரிமையாளர்கள் கூறியதாவது:

குவாரியில் தற்போதுள்ள மொத்த பள்ளத்தையும் கணக்கிட்டு கற்களை காணவில்லை என வழக்கு பதிவு செய்தனர். அங்கி ருந்து வெட்டப்பட்ட கற்கள் அருகில் உள்ள பட்டா இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதை ஏற்காமல் பட்டா இடத்தில் கற்களை அடுக்கியதற்கும் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.

குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கழிவு கற்கள்தான் பட்டா இடத் தில் அடுக்கப்பட்டுள்ளவை என்பதை யும் ஏற்க மறுக்கிறார் ஆட்சியர்.

பொதுவாக குவாரியில் அதிகபட்சம் 20 சதவீதம் மட்டுமே கிரானைட் கற்கள் கிடைக்கும். மதுரை குவாரிகளில் 8 முதல் 18 சதவீதம் மட்டுமே கிரானைட் கற்களாக உள்ளன. மற்றவை கழிவு கற்கள். ஆனால், 90 சதவீதம் கிரானைட் இருப்பதாக கணக்கிட்டு ஒரு கியூபிக் மீட்டருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்தும்படி கூறுகின்றனர்.

பல்வேறு நபர்கள் குவாரியை நடத்தியிருந்தாலும், கடைசியாக நடத்தியவர் இந்தத் தொகையை செலுத்த வேண்டும் என்பதை எப்படி ஏற்க முடியும் எனக் கேட்டோம். மேலும் இது தொடர் பாக முழுமையான விளக்கம் தர மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டதை ஆட்சியர் ஏற்கவில்லை என்றனர்.

ஆட்சியர் தெரிவித்தது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சட்டப்படி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். எந்த விளக்கமானாலும் வரும் 5-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இதற்கு மேல் அவகாசம் அளிக்க முடியாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x