Published : 07 Jun 2015 09:41 AM
Last Updated : 07 Jun 2015 09:41 AM

குடிநீர், கழிப்பிடம், சந்தை மேடை என அடிப்படை வசதியின்றி காசிமேடு மீன்பிடி துறைமுகம்: வெயிலில் கருவாடாகும் வியாபாரிகள்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குடிநீர், கழிப்பிடம், வடிகால் வசதிகள், மேற்கூரை என எந்த வசதியும் இல்லாததால் சிறு வியாபாரிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

தினமும் சுமார் 25 ஆயிரம் பேர் புழங்கும் பரபரப்பான இடம் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம். இது 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த விலையில் மீன் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் குவிகின்றனர்.

கடலுக்குச் சென்று திரும்பும் மீனவர்கள் மொத்த விற்பனை விலையில் மீன்களைக் கொடுப்பார்கள். அவர்களிடம் மீன் வாங்கி, வெட்டி விற்பதில் நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் ஈடுபடுகின்றனர். அவர்களில் பலர் பெண்கள். வியாபாரம் செய்வதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் இல்லாததால் சில்லறை வியாபாரிகள் இங்கு வெயிலில் காய்ந்து கருவாடாகும் பரிதாப நிலை உள்ளது. கொளுத்தும் வெயிலில் அமர்ந்து ஒரு கையில் குடையைப் பிடித்துக்கொண்டே வியாபாரம் செய்வது, அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இங்கு 15 ஆண்டுகளாக வியாபாரம் செய்யும் லட்சுமி கூறும்போது, ‘‘அதிகாலை முதல் 11 மணி வரை ஒரே இடத்தில் உட்கார்ந்து வியாபாரம் செய்கி றோம். இப்பகுதி முழுவதும் சகதி யாக இருக்கும். அதில்தான் வியாபாரம் செய்துவந்தோம். ஒரு வாரம் முன்பு சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது. இதேபோல, மேடை, கூரையும் அமைத்துத் தந் தால் வசதியாக இருக்கும்’’ என்றார்.

இங்குள்ள வியாபாரிகள், வந்து செல்பவர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இங்கு இல்லை. அரை கி.மீ. தொலைவில் ஒரே ஒரு மாநகராட்சி கழிப்பறை உள்ளது. அதுவும் மூடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்யும் தென்றல் கூறியபோது, ‘‘மறைவான இடங்கள்தான் இங்கு கழிப்பிடம். கூட்டம் அதிகம் இருந்தால், அதற்கும் வாய்ப்பு இருக்காது. வீட்டில் இருந்து ஒரே ஒரு பாட்டில் குடிநீர் கொண்டுவருவேன். அது காலியாகிவிட்டால் வீட்டுக்குச் செல்லும் வரை தண்ணீர் கிடைக்காது’’ என்றார்.

இப்பிரச்சினைகள் பற்றி மீனவர் மக்கள் முன்னணி தலைவர் ஜே.கோசுமணி கூறியதாவது:

15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காசிமேடு துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஐரோப்பிய அதிகாரிகள் ஒருமுறை இங்கு வந்து பார்வையிட்டனர். இந்த இடம் சுகாதாரமின்றி இருந் ததால் நேரடி ஏற்றுமதி நிறுத்தப் பட்டது. தமிழகத்தில் காசிமேடு துறைமுகம் மட்டும் தமிழக மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மத்திய அரசின் கீழ் உள்ள சென்னை துறைமுகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே எங்களது கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு கிடைப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜி.சங்கர் கூறியபோது, ‘‘எண்ணூர் துறைமுகத்துக்கு நேரடியாக வாகனங்கள் செல்வதற்காக இங்கு மீன்வெட்டும் மேடை இடிக்கப்பட்டு சாலையை விரிவாக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இதனால் இடம் மாறவேண்டியிருக்கும் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இங்கு சாக்கடை வசதி இல்லாததால் கழிவுகளை வெளியேற்றுவதும் பிரச்சினையாக உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x