Published : 17 Jun 2015 08:48 AM
Last Updated : 17 Jun 2015 08:48 AM

நெஸ்லே செர்லாக் உணவில் வண்டுகள் இருந்ததாக புகார்: உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை

கோவையில், நெஸ்லே நிறுவனத்தின் செர்லாக் உணவில் வண்டுகள் இருந்த தாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், அந்த உணவு பாக்கெட்டுகளை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரான ராம், பேரூரில் உள்ள மருந்தகம் ஒன்றில் தனது குழந்தைக்காக நெஸ்லே நிறுவனத்தின் செர்லாக் உணவை வாங்கியுள்ளார். அதில், ஏராளமான வண்டுகள் இருந்ததுடன் அது பூஞ்சை பிடித்தும் இருந்ததாம்.

இதையடுத்து, அந்த நெஸ்லே செர்லாக் பாக்கெட்டுடன், கோவை உணவுப் பாதுகாப்பு துறை அலுவல கத்துக்கு நேற்று வந்த அவர், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவனிடம், நெஸ்லே செர்லாக் பாக்கெட்டை அளித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். இதுகுறித்து அலுவலர் கதிரவன் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘புகாரின்பேரில் சம்பந்தப் பட்ட உணவு மாதிரிகள் கைப் பற்றப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 3 நாட்களில் ஆய்வு முடிவுகள் தெரிய வரும். செர்லாக் பாக்கெட்டின் வரிசை எண்களில் உள்ள அனைத்து பாக்கெட்டுகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த இருக்கிறோம். ஆய்வு முடிவின் அடிப்படையில் நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சிக்கன் கடையில் வாங்கப்பட்ட பாக்கெட் சிக்கனில் புழுக்கள் இருந்ததாக தொடரப்பட்ட புகாரில், ஆய்வக சோதனையில் புழுக்கள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனம் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடவடிக்கையில் உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், செர்லாக் உணவு மீது புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x