Published : 30 Jun 2015 08:44 AM
Last Updated : 30 Jun 2015 08:44 AM
ஆலந்தூர் - கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். ஏராளமான பொதுமக்கள் முதல் ரயிலில் குளு, குளு பயணம் மேற்கொண்டனர். சென்னை மாநகரம் அடுத்த கட்டத்துக்கு வளர்ச்சியடைந்துவிட்டதாக, மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஆலந்தூரில் பிரம்மாண் டமாக ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தலா 4 இடங்களில் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில் முன்பகுதியில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம், கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு தகவல் அளிக்க வாடிக்கையாளர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் ஏடிஎம் வசதி உள்ளது. மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய உள்ளே செல்வதற்கு சென்சார் பொருத்தப்பட்ட வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே செல்ல 5 வழிகளும், வெளியே செல்ல 5 வழிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஒரு வழியும் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்த வெளியே வசதி செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் பொருட்களை பரிசோதனை செய்ய ஸ்கேனர் நிறுவப்பட்டுள்ளன. கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் செல்லும் இடங்களுக்கான வரைபடங்கள், கட்டிடங்களில் உள்ள வசதிகள் தொடர்பான விளக்கப் படங்களும் இடம்பெற்றுள்ளன. எல்லா விதமான அறிவிப்பு பலகைகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்டிருந்தன.
உயர்மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே நடைமேடைகளுக்கு செல்லவும், கீழே இறங்கி வரவும் 40 மீட்டர் தூரத்துக்கு தலா 4 எஸ்கலேட்டர்கள் உள்ளன. நடுப்பகுதியில் படிகளில் நடந்து செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது. ரயில் வரும் நேரம், புறப்படும் நேரத்தை தெரிவிக்க 4 ‘தகவல் திரைகள்’ அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அவசர காலத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க 2 தொலைபேசி மையங்களும், தீயணைப்புக்கு 2 பெரிய கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மெட்ரோ ரயிலில் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரயிலிலும் 4 பெட்டிகள் உள்ளன. முதல் பெட்டியில் பெண்கள், முதல் வகுப்பு பயணிகள் செல்ல முடியும். 2-வது மற்றும் 4-வது பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 350 பேர் என ஒரு ரயிலில் 1,400 பேர் பயணம் செய்ய முடியும்.
ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கிவைத்தார். இதையடுத்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் ஆலந்தூரில் இருந்து 12.14-க்கு புறப்பட்டது. ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம், சிஎம்பிடி ரயில் நிலையங்கள் வழியாக கோயம்பேட்டை 12.32-க்கு வந்தடைந்தது. 35 கி.மீ. வேகத்தில் இருந்து அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது.
மெட்ரோ ரயிலில் முதல்நாளில் பயணிக்க ஏராளமான பெண்கள், குழந்தைகள் ஆலந்தூர் ரயில் நிலையத்தில் காலையிலேயே குவிந்தனர். ரயில் புறப்பட்டவுடன் உற்சாகத்துடன் செல்போன்கள் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொண்டனர். சிலர் செல்போன் மூலம் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக குளு, குளு பயணம் மேற்கொண்டனர்.
ரயில் புறப்பட்டவுடன் அடுத்த ரயில் நிலையம் குறித்து அறிவிக்கப்பட்டது. கூடவே ரயில் மற்றும் ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆலந்தூரில் இருந்து செல்லும்போது ரயில் நிலையங்களில் இடது புறமும், கோயம்பேட்டில் இருந்து வரும்போது வலது புறமும் தகவுகள் திறக்கப்பட்டன.
முதல் நாளில் ரூ.10 லட்சம்
மெட்ரோ ரயிலில் முதல் நாளான நேற்று இரவு 8 மணி வரையில் சுமார் 25 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். சுமார் ரூ.10 லட்சம் கட்டணமாக வசூலாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் கூறும்போது, ‘‘ரூ.14,600 கோடி செலவில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், ஆலந்தூர் கோயம்பேடு இடையே பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்துள்ளார்.
2-வது வழித்தடத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் மெட்ரோ பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டப்பணிகளுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
ரயிலை இயக்கிய பெண் ஓட்டுநர்
ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி புறப்பட்ட முதல் மெட்ரோ ரயிலை சென்னையை சேர்ந்த பிரீத்தி (28) என்பவர் ஓட்டி வந்தார். இவர், சென்னை தரமணியில் உள்ள தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்.
இது தொடர்பாக அவரது தந்தை ஆர்.அன்பு கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் ஏற்கனவே செய்துவந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பித்தார்.
ஓட்டுநர் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டதும் சென்னை, டெல்லியில் ஓர் ஆண்டு பயிற்சி பெற்றார். தற்போது, 3 பெண்கள் ரயில் ஓட்டுநர்களாக (பைலட்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், என் மகளும் பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.
சென்னையின் முதல் மெட்ரோ ரயிலை இயக்கியவர் என்ற சிறப்பிடத்தை பிரீத்தி பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 மாத கைக் குழந்தையுடன் பெண்
மெட்ரோ ரயில் முதல்நாளில் பயணிக்க 3 மாத கைக்குழந்தையுடன் வந்திருந்த எம்.மோனகா மற்றும் பி.கவுசல்யா (ஆலந்தூர்) பேசும்போது, ‘‘முதல் நாளில் மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டுமென ஆர்வமாக இருந்தது. இதனால், என் தந்தை மற்றும் தங்கையுடன் எனது 3 மாத ஆண் குழந்தையுடன் (சுபாஷ்) பயணிக்க வந்துள்ளோம். இங்குள்ள ரயில் நிலையத்தை பார்த்தாலேயே பிரமிப்பாக இருக்கிறது. இதுவரையில் நம் ஊரில் இதுபோன்ற ரயில் நிலையத்தை பார்த்ததே இல்லை. மெட்ரோ ரயிலில் முதல்நாளில் பயணிக்கும் முதல் குழந்தையாக என் குழந்தை இருக்கும் என எண்ணுகிறேன்’’ என்றார்.
மகன் பிறந்தநாளை கொண்டாடிய தந்தை
ஆலந்தூரைச் சேர்ந்த பி.செல்வராஜ் மகிழ்ச்சி பொங்க பேசினார். அவர் கூறும்போது, ‘‘இன்று (நேற்று) எனது மகனுடைய பிறந்த நாள். இந்த நாளில் மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டுமென விரும்பினான். அதனால், என் குடும்பத்துடன் என் மகனின் பிறந்தநாளை மெட்ரோ ரயிலில் கொண்டாடுகிறோம். இங்குள்ள வசதிகளை பார்க்கும்போது, சென்னை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முன்னேறியுள்ளது என தோன்றுகிறது’’ என்றார்.
முதல் டிக்கெட் வாங்குவதில் போட்டி
ஆலந்தூரில் மெட்ரோ ரயில் புறப்பட்டவுடன் பிற்பகல் 12.17 மணி அளவில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெளியே காத்திருந்த பயணிகள் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பயணிகள் உற்சாகத்துடன் கூச்சலிட்டவாறு முதல் மாடிக்கு வந்தனர். அங்கு முதல் டிக்கெட்டை யார் பெறுவது என பயணிகளுக்குள் போட்டி ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆர்.பாலு என்பவர் முதல் டிக்கெட்டை பெற்றவுடன், துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நாணயம் போன்ற டிக்கெட்டுக்கு வரவேற்பு
மெட்ரோ ரயில் நிலையங்களில், ரூ.100 கொடுத்தால் ஏடிஎம் அட்டை போன்ற பயண அட்டை வழங்கப்படுகிறது.
இதில் அட்டையின் மதிப்பு ரூ.50 போக மீதம் உள்ள ரூ.50-ஐ நாம் பயணம் செய்ய பயன்படுத்திக்கொள்ள முடியும். அந்த அட்டையை தேவைக்கு ஏற்ப பணம் கொடுத்து ரீசார்ஜ் செய்துகொண்டு தேவைப்படும்போது பயன்படுத்த முடியும்.
இது தவிர நாணயம் வடிவிலான டிக்கெட்டுகளும் உள்ளன. இந்த டிக்கெட்டுகளைக் கொண்டு ஒருமுறை மட்டுமே பயணம் செய்ய முடியும். நாம் செல்லும் பயண தூரத்துக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ரூ.10 முதல் இந்த டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். நாணயம் போன்ற பயண டிக்கெட்டுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. இந்த கவுண்டர்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றுச் சென்றனர்.
திரைப் பிரபலங்கள் ஆர்வம்
மெட்ரோ ரயிலில் பயணிப்பதில் பொதுமக்களுக்கு இருந்த ஆர்வத்தை போன்று திரை பிரபலங்களுக்கும் இருந்ததை பார்க்க முடிந்தது. கோயம்பேடு ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக திரைப்பட இயக்குநர் சுந்தர்ராஜன், குண்டு கல்யாணம் உள்ளிட்டோரும் வந்து ரயிலில் பயணித்தனர்.
வாகன நெரிசல், புகையிலிருந்து விடுதலை: பயணிகள் உற்சாகம்
மெட்ரோ ரயிலில் பயணித்த பெரும் பாலானோர் வாகன நெரிசல் மற்றும் புகையிலிருந்து விடுதலை கிடைத்திருப்பதாக கூறியதைக் கேட்க முடிந்தது. இது தொடர்பாக பயணி எல்.திலக் கூறும்போது, “வழக்கமாக ஆலந்தூரில் இருந்து பஸ்ஸில் கோயம்பேடு வர சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் ஆகும். போக்குவரத்து நெரிசல், வாகன புகை போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஏசி வசதியுடன் கூடிய மெட்ரோ ரயிலில் சுமார் 18 நிமிடங்களில் கோயம்பேடு வந்து சேர்ந்துவிட்டேன். ஆனால், பெங்களூர், டெல்லியை விட இங்கு கட்டணம் அதிகம்தான்” என்றார்.
ஒரு நாள் மட்டும் சலுகை
பயணிகள் பலர் ஆலந்தூரிலிருந்து கோயம்பேட்டுக்கும், கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூருக்கும் பயணித்தனர். இதில் பயண அட்டையை பயன்படுத்தியவர்கள், ரயில் நிலையத்தை விட்டு வெளியே வராமல் அதே பயண அட்டையை வைத்து, ஏறிய ரயில் நிலையத்துக்கே திரும்ப வந்தடைந்து ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினர். இதற்கு கட்டணமாக ரூ.80 கழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு ரூ.9 மட்டுமே கட்டணமாக செலவானது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘முதல் நாள் என்பதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் இந்த சலுகை கிடைக்காது. ரயில் நிலையத்தினுள் நுழைந்துவிட்டால், அந்த நேரம் கணக்கிடப்பட்டு, அதற்கேற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும்’’ என்றார்.
விடுப்பு எடுத்துக்கொண்டு பயணம்
வேளச்சேரியைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறும்போது, “சென்னை மெட்ரோ ரயிலுக்கான பணிகள் தொடங்கியபோதே, மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. தற்போது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தது மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது. நான் சில ஆண்டு காலம் சிங்கப்பூரில் பணியாற்றினேன். மெட்ரோவில் பயணித்தபோது, சிங்கப்பூரில் இருந்த உணர்வு மீண்டும் வந்தது. அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மெட்ரோவில் பயணித்தது கூடுதல் சுவாரசியம். ரயில் நிலையமும் ஏதோ மால்களைப் போல உள்ளன’’ என்றார்.
‘எங்கள் உழைப்பு ரயிலாக ஓடுகிறது’
மெட்ரோ ரயில் இயக்கம் தொடர்பாக மெட்ரோ ரயில் பணியாளர் ராஜன் கூறும்போது, “ மெட்ரோ ரயில் பணியில் கடந்த 5 வருடமாக ஈடுபட்டு வருகிறேன். தண்டவாளத்தில் மின்சார லைன் செல்வதற்கான கம்பிகளை பதிப்பதுதான் எனது பணி. இன்றைக்கு எங்களின் உழைப்பு ரயிலாக ஓடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பணிக்காக எத்தனையோ ஊழியர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். சென்னையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல எங்களின் பங்களிப்பும் காரணமாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
ரூ.40 கட்டணம் ஏற்புடையதே
வி.ஏழுமலை என்ற பயணி கருத்து தெரிவிக்கையில், “கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூருக்கு ரூ.40 கட்டணம், வசூலிக்கப்படுகிறது. ரயில் நிலையம் முழுவதும் குளிர்சாதன வசதி உள்ளது. ஏதோ பெரிய ஷாப்பிங் மாலில் இருப்பது போன்ற உணர்வு உள்ளது.
கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூருக்கு ஏ/சி வோல்வோ பேருந்தில் சென்றாலும் அதே தொகைதான் ஆகும். மெட்ரோ ரயிலில் டிராஃபிக் பிரச்சினை இல்லை. கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூருக்கு 15 நிமிடங்களுக்குள்ளாகவே வந்துவிடலாம். எனவே, ரூ.40 என்பது ஏற்புடையதாகத்தான் உள்ளது” என்றார்.
சென்னை மக்களின் ஆசை நிறைவேறியது
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுக அரசு பதவி வகித்தபோது 2007-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.14,600 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் திமுக ஆட்சியில் விரைவாக நடைபெற்று வந்தன.
மெட்ரோ ரயிலுக்காக நீண்ட நாள் காத்திருந்த சென்னை மக்களின் ஆசை நிறைவேறியுள்ளது. மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் பயண நேரம் குறையும். விபத்துகளை தவிர்த்து, போக்குவரத்து நெருக்கடியால்படும் சிரமங்களையும் போக்க முடியும். பிற நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT