Published : 18 Jun 2015 08:22 AM
Last Updated : 18 Jun 2015 08:22 AM

நெல் ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.50 மட்டுமே உயர்வு: வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிய பாஜக அரசு - டெல்டா விவசாயிகள் கடும் அதிருப்தி

நெல்லுக்கான ஆதரவு விலை யைக் குவிண்டாலுக்கு ரூ.50 மட்டுமே உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு டெல்டா விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தற்போது நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,360 ஆக உள்ளது. இதனை குவிண்டாலுக்கு ரூ.50 உயர்த்தி நிகழாண்டுக்கான விலையாக ரூ.1,410 வழங்க மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக் கான அமைச்சரவைக் குழு டெல்லியில் நேற்று கூடி முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு தங்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாகக் கூறும் தமிழக விவசாயிகள், விளைநிலங்கள் அனைத்தும் விலைநிலங்களாக (வீட்டுமனைகளாக) மாறிவரும் சூழலில் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாயி களை ஊக்கப்படுத்துவதுபோல ஆதாயமான விலை கொடுத் திருக்கவேண்டும். மாறாக விவ சாயிகளை வஞ்சிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டால், விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கமுடியாது என்கின்றனர்.

ஆண்டுதோறும் உயர்ந்துவரும் உரம், இடுபொருட்களின் விலை, உழவுக் கருவிகளுக்கான வாடகை உயர்வு, டீசல் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஆகியவற்றை கணக்கிடும்போது அரசு நிர்ணயித்துள்ள ஆதரவு விலை போதுமானதல்ல என்பதை விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

விவசாயிகள் விரோதப் போக்கு

தமிழக நெல் விவசாயிகள் பேரமைப்பின் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் கூறியபோது, “வேளாண்மை உற்பத்தி பொருட் களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து விலையாக நிர்ணயிக்க வேண்டுமென எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையி லான தேசிய விவசாயிகளின் ஆணையம் 2006-ல் பரிந்துரை செய்தது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இந்தப் பரிந்துரையை ஏற்கவில்லை. இந்தப் பரிந்துரையை நாங்கள் அமல்படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசும் இதை கண்டுகொள்ள வில்லை.

இது மத்திய அரசின் விவசாயிகள் விரோதப் போக்கையே காட்டு கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக் கும், பெருமுதலாளிகளுக்கும் நாள்தோறும் சலுகைகளை அறிவித்து வரும் மத்திய அரசு, ஆதாயம் இல்லாமல் எந்தத் தொழி லும் செய்ய முடியாது, விவசாயி களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

யானைப் பசிக்கு சோளப் பொரி

டெல்டா விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலை வர் பி.ஆர்.பாண்டியன் கூறிய போது, “விவசாயிகளை ஊக்கு வித்து, வேளாண்மை உற்பத் தியை அதிகப்படுத்தி, விவசாயி களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவோம் என்று கூறி, காங்கிரஸ் அரசை வீழ்த்திவிட்டு பாஜக ஆட்சியை பிடித்தது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதையும் துளிகூட மேற்கொள்ள வில்லை.

ஏற்கெனவே சாகுபடி செலவு உயர்வு மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பெரும் கஷ்டத் துக்குள்ளாகி உள்ள விவசாயி களுக்கு மத்திய அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.50 மட்டும் உயர்த்தியுள்ளது யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றது” என்றார்.

நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை நிர்ணயிக்க வேண்டு மென விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலை யில், இப்போது ஒரு குவிண்டா லுக்கு ரூ.50 என்கிற அளவில் விலையை உயர்த்தியுள்ளது விவசாயிகளை விவசாயப் பணி களில் இருந்து வெளியேற்றவே செய்யும் என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

எல்லா இடுபொருட்களின் விலையும் உயர்வு

1981-ல் குவிண்டால் நெல் விலை ரூ.120, அப்போது ஒரு ஜோடி (ஆண், பெண்) தொழிலாளர்களின் நாள் கூலி ரூ.12. ஒரு குவிண்டால் நெல்லை விற்றால் 10 ஜோடி தொழிலாளர்களுக்கு கூலி வழங்க முடியும். தற்போது குவிண்டால் நெல்லின் விலை ரூ.1,360. இதை வைத்துக்கொண்டு 3 ஜோடி தொழிலாளர்களுக்குக் கூட கூலி வழங்க முடியாது. இதுபோன்று எல்லா இடுபொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஆனால், நெல் விலை மட்டும் உயரவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x