Last Updated : 26 Jun, 2015 05:55 PM

 

Published : 26 Jun 2015 05:55 PM
Last Updated : 26 Jun 2015 05:55 PM

ஹெல்மெட்டை நடுரோட்டில் உடைத்து போராட்டம்: பொது விநியோகத் திட்டத்தில் அரசே விற்க கோரிக்கை

தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளும், அவரது பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அணியாவிட்டால் ஓட்டுநர் உரிமத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

சாலைகளில் நேரும் விபத்துகளின்போது அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுவது ஹெல்மெட் அணியாததால்தான் என குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஹெல்மெட் விற்பனை அதிகரித்துள்ளது. உத்தரவு நடைமுறைக்கு வர இன்னும் சில தினங்களே இருப்பதால் தரமான ஐஎஸ்ஐ ஹெல்மெட்டுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தரமற்ற ஹெல்மெட்டுகள் குறைந்த விலைக்கு சாலையோரம் விற்பனை செய்யப்படுகின்றன. சிலர் அந்த ஹெல்மெட்டுகளை வாங்குகின்றனர். ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய ஹெல்மெட்டை வாங்கவேண்டும். இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவருக்கும், அமர்ந்து செல்வோருக்கும் கட்டாயம் ஹெல்மெட் வேண்டும் என்பதால் பெரும்பாலானோர் ஹெல்மெட்டுக்காக கூடுதலாக செலவழிக்க விரும்பவில்லை. குறைந்த விலையில் கிடைப்பதை வாங்கிக்கொள்வது என்ற மனநிலைக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், தரமற்ற ஹெல்மெட் விற்கப்படுவதாகக் கூறி அவற்றை நடுரோட்டில் உடைத்து திருச்சியில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு தரமான ஹெல்மெட்டை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் கூறும்போது, "ஹெல்மெட் அணிவது தொடர்பாக அரசும், நீதிமன்றங்களும் அவ்வப்போது உத்தரவு பிறப்பிப்பதும், அதைத் தொடர்ந்து சில நாட்கள் போலீஸார் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கெடுபிடி கொடுப்பதும், காலப்போக்கில் அரசின் உத்தரவுகள் நீர்த்துப் போய்விடுவதும் தொடர்கிறது.

உண்மையிலேயே அரசுக்கு அக்கறையிருந்தால், இரு சக்கர வாகனம் வாங்கும்போது எவ்வாறு சாலை வரி, பதிவுக் கட்டணம் உள்ளிட்டவை உடனடியாக வசூலிக்கப்படுகிறதோ அதுபோன்று தரமான ஐஎஸ்ஐ ஹெல்மெட்டையும் வழங்கி அதற்கான தொகையைப் பெறவேண்டும். இல்லையெனில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து இருசக்கர வாகன ஓட்டிகள் உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது, ஹெல்மெட் வாங்கியதற்கான அத்தாட்சி நகலை ஒப்படைத்தால்தான் உரிமம் தரப்படும் என சட்டம் இயற்றவேண்டும். அப்போதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்" என்றார்.

அரசு ஆலோசிக்குமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x