Published : 08 Jun 2015 08:24 AM
Last Updated : 08 Jun 2015 08:24 AM
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின் போது எண் மற்றும் எழுத்துகளை கொண்ட ‘கேப்சா’ குறியீடுகள் புரியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
அவசரமாக ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கை கொடுப்பது தட்கல் டிக்கெட் முறை. ஆனால் தட்கலில் முன்பதிவு செய்ய ரயில்வே முன்பதிவு கவுண்டர்களில் முந்தைய நாள் இரவு முதலே காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. அப்படி காத்திருந்தும், சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வதால் பலருக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. அதேநேரத்தில் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் நிலையும் பரிதாபமாக உள்ளது.
புக்கிங்கிற்கான விவரங்களை பதிவு செய்து கட்டண தொகையை செலுத்தும்போது, இணைப்பு துண்டிக்கப்படுவதும், மறுபடியும் முதலில் இருந்து அதை ஆரம்பிப்பதும் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் பதிவை முடித்த பிறகு இறுதியாக எழுத்து மற்றும் எண்ணை கொண்டு அடையாளத்தை பதிவு செய்யும் குறியீடான கேப்சாவை (captcha) பதிவு செய்ய பலரும் தடுமாறுகின்றனர். அதிலும் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின் போது, கேப்சா குறியீடுகள் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி கடினமாக இருக்கிறது. 3 அல்லது 5 முறைக்கு மேல் முயற்சிக்க வேண்டியுள்ளது. அதற்குள் நேரம் கடந்து, மற்றவர்கள் டிக்கெட்டை பதிவு செய்து விடுகிறார்கள்.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில் டிக்கெட் முன்பதிவுக்குரிய சர்வர் பிரச்சினையை தீர்க்க, இரண்டு உயர் திறன் சர்வர்களை ஐஆர்சிடிசி சமீபத்தில் நிறுவியுள்ளது. இதன்மூலம் நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்டுகளாக இருந்த முன்பதிவு திறன், தற்போது 14,000 டிக்கெட்டுகளாக அதிகரித்துள்ளது. சிலர் அதிகளவில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதை தடுக்கவே ‘கேப்சா முறை’ பயன்படுத்தப்படுகிறது. இதில், எந்த குளறுபடிகளும் இல்லை.’’என்றனர்.
கேப்சா முறையை எவ்வாறு எளிமைப்படுத்தலாம் என்பது குறித்து டிஆர்இயு சங்கத்தின் செயல் தலைவர் ஆர்.இளங் கோவனிடம் கேட்டபோது,‘‘தட்கல் டிக்கெட் முன்பதிவில் உள்ள குளறு படிகளை நீக்க ரயில்வே நிர் வாகம் சமீபத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் தட்கல் முன்பதிவின் போது, ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களால் மேல் கோடிட்டு காணப்படும் கேப்சா குறியீடுகளை உடனடியாக பதிவு செய்ய முடியாமல் சாதாரண மற்றும் நடுத்தர பயணிகள் அவதிப் படுகின்றனர். குறிப்பாக k, y, x, z போன்ற ஆங்கில எழுத்துகளை பெரியது, சிறியது என வேறு படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. எனவே, எழுத்துக்கள், எண்களை இடைவெளி விட்டு காண்பிக்கலாம் அல்லது வேறுபடுத்த கடினமாக இருக்கும் எழுத்துக்களை தவிர்க்கலாம் அல்லது அதிகளவில் எண்களை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை நடைமுறைப்படுத்தினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.
எண்களை இடைவெளி விட்டு காண்பிக்கலாம் அல்லது வேறுபடுத்த கடினமாக இருக்கும் எழுத்துக்களை தவிர்க்கலாம் அல்லது அதிகளவில் எண்களை பயன்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT