Published : 24 Jun 2015 10:10 AM
Last Updated : 24 Jun 2015 10:10 AM
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாகவே தமிழகத்தில் நடப்பாண்டு வழக்கத்துக்கு மாறாக பருவமழைகள் முன்கூட்டியே தொடங்கி, அளவுக்கு அதிகமாக பெய்து வருவதாக கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் சராசரி மழை யளவு 843 மி.மீ. ஆனால், 600 மி.மீ. முதல் 1,250 மி.மீ. மழை தண்ணீரை தாங்கிக்கொள்ளும் நீர்நிலைகளைக் கொண்ட மாநிலம். கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் கடும் வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது. அத்துடன் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டு தொடக்கம் முதலே கனமழை பெய்து வருகிறது. ஆனால், பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் பருவம் தவறி, அளவுக்கு அதிகமாக மழை பெய்துள்ளது. அதாவது கடந்த ஏப்ரலில் 179 மி.மீ. மழையும், மே மாதம் 232 மி.மீ. மழைப் பொலிவு இருந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 5 நாட்களும், மே மாதத்தில் 6 நாட்களும் மழை பெய்துள்ளது. இது சராசரி மழையளவைவிட இருமடங்கு அதிகம்.
பொதுவாக சித்திரை பட்டத்தில் விதைப்பதற்கு முன் ஒரு கோடை மழையும் (ஏப்ரல் முதல் வாரம்), பூப்பிடித்து காய் ஆகும் நேரத்தில் ஒரு மழையும் (மே முதல் வாரம்), விளைச்சலை அதிகப்படுத்தும் மழை (மே கடைசி வார மழை) என 3 மழை பெய்ய வேண்டும் என்பது முன்னோர்களின் கூற்று.
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக ஏப்ரலில் விதைப்பதற்கு முன் மழை பெய்யாமல் விதைத்தபின் 5 மழை, பூ பூத்தபின் 6 மழை என்ற அளவில் பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் 15-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை பெய்ய வேண்டும். ஆனால், தற்போது மேற்குத்தொடர்ச்சி மலை தென்மேற்கு பருவமழையும், தமிழகத்தின் மற்றப்பகுதிகளில் வெப்ப சலனத்தின் காரணமாகவும் மழை பெய்யத் தொடங்கிவிட்டது.
இதுகுறித்து கொடைக்கானல் இந்திய வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி குமரவேல் கூறும்போது, ‘கொடைக்கானல், வால்பாறை கோடைவாசஸ்தலங்கள் கேரள மலைத்தொடரை சார்ந்துள்ளன. கொடைக்கானல் தமிழகத்தில் இருந்தாலும் கேரளத்தை யொட்டி இருப்பதால் அங்கு நிலவும் காலநிலைதான் இங்கும் நிலவும். தமிழகத்தின் மற்ற பகுதி யில் நிலைமை அப்படியில்லை. தமிழகத்தில் வழக்கமாக பலமான காற்று வீசிய பின்தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதியே மழை தொடங்கிவிட்டது. தற்போது காற்று வீசி வருகிறது.
சமீபத்தில் நேபாளத்தில் ஏற் பட்ட நில நடுக்கத்தின் தாக்கம் சென்னை வரை கண்டறியப்பட்டது. பொதுவாக ஒருபுறத்தில் நிலநடுக் கம் ஏற்பட்டால் மறுபுறத்தில் அதனால் ஏற்படும் அதிர்வுகளால் மழையளவு அதிகரிக்கும். சாதாரணமாக மழை வருவதற்கும், நிலஅதிர்வுக்குப் பின் மழை வருவதற்கும் வித்தியாசம் உள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாகவே தமிழகத்தில் இந்த ஆண்டு பருவம் தவறி அதிக மழை பெய்கிறது. பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யாமல் இவ்வாறு பருவம் தவறி திடீரென்று மழை பெய்வதால் சேதம் ஏற்படுகிறது’ என்றார்.
நாசாவின் கணிப்பு
திண்டுக்கல் மாவட்ட நீர் வடிப்பகுதி மேம்பாட்டு முகமை வேளாண் பொறியாளர் ஜான் பிரிட்டோ ராஜ் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘இந்தாண்டு தாமதமாக மிக குறைந்த மழையே கிடைக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
ஆனால், அமெரிக்காவின் நாசா வானிலை மையம் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் சராசரி மழையளவைவிட அதிகப்படியான மழை பெய்யும் எனத் தெரிவித்திருந்தது.
ஜப்பானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இந்த ஆண்டு புதிய காற்று வீசத் தொடங்கியுள்ளதால் கூடுதல் மழை கிடைக்கும். இதை உறுதி செய்யும் வகையில் ஏப்ரல், மே மாதத்தில் கனமழை கிடைத்துள்ளது.
கேரளத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை சீசன் குறைந்திருந்தாலும் அதிகப்படியான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சரியான காலத்தில் மழை பெய்யாமல், பிற காலங்களில் மழை பெய்வது விளைச்சல் பாதிப்பதுடன் பயிர் வளர்ச்சியையும் பாதித்துள்ளது. இதனால், களைப்பெருக்கம் அதிகமாகி பராமரிப்பு செலவு அதிகமாகும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT