Published : 08 Jun 2015 08:14 PM
Last Updated : 08 Jun 2015 08:14 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 மாதம் தாமதத்துக்கு பின் உப்பு உற்பத்தி தொடங்கியுள்ளது. உற்பத்தியை அதிகரிக்கும் என்பதால் தென்மேற்கு பருவக் காற்றை உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பாறு, தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படு கிறது. நாட்டி ன் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். வழக்கம் போல் இந்த ஆண்டும் உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த ஜனவரி மாதம் உப்பளங்களை சரி செய்து உற்பத்திக்கான பணிகளை தொடங்கினர்.
தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் உப்பு வாரும் பணிகள் நடைபெற்றன. உப்பு உற்பத்தி தொடங்கிய சில நாட்களிலேயே மழை குறுக்கிட்டது. தொடர்ச்சியாக பெய்த கோடை மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. உப்பளங்களில் மழைநீர் தேங்கி பணிகளை முடக்கியது.
குஜராத்திலிருந்து வருகை
வழக்கமாக இந்த நேரத்தில் தூத்துக்குடி பகுதியில் சுமார் 5 லட்சம் டன் வரை உப்பு கையிரு ப்பில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தொடங்க காலதாமதம் ஏற்பட்டதால் கையிருப்பில் இருந்த அனைத்து உப்பும் காலியாகிவிட்டன. இதனால் தூத்துக்குடியில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டு டன் ரூ.2 ஆயிரம் வரை விலை போனது. விலை கடுமையாக உயர்ந்த போதும் விற்பனை செய்ய உற்பத்தியாளர்களிடம் உப்பு இல்லை. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் இருந்து கப்பல் மூலம் உப்பு கொண்டுவரப்பட்டது. இதுவரை 1.20 லட்சம் டன் உப்பு, கப்பல் மூலம் தூத்துக்குடி கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட உப்பளங்களில் தற்போது உப்பு உற்பத்தி படிப்படியாக தொடங்கியுள்ளது. இருப்பினும் உப்பளங்களில் முழுமையான உப்பு உற்பத்தி தொடங்க மேலும் சில நாட்கள் ஆகும் என, உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உற்பத்தி குறைவு
தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ். தனபாலன் கூறும் போது, ‘உப்பளங்களில் தற்போது அரைகுறையாக உப்பு உற்பத்தி தொடங்கி இருக்கிறது. உற்பத்தி முழுமையாக இருக்க உப்பு பாத்திகளில் உள்ள தண்ணீரின் அடர்த்தி 24 டிகிரி இருக்க வேண்டும். தற்போது 18 முதல் 20 டிகிரி தான் இருக்கிறது. இதனால் விளைச்சல் குறைவாகவே உள்ளது.
25 மூட்டை உப்பு கிடைத்த ஒரு பாத்தியில் தற்போது 10 மூட்டை அளவுக்கு தான் கிடைக்கிறது. தென்மேற்கு பருவக்காற்று தான் உப்பு உற்பத்தியை அதிகரிக்கும். அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசும் என, எதிர்பார்க்கிறோம். மழை ஏதும் குறுக்கிடாமல் இதேநிலை அக்டோபர் வரை நீடித்தால் 60 சதவீத உப்பு உற்பத்தி இருக்கும். இல்லையெனில் அதைவிடவும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
விலை குறையும்
தற்போது உப்பு டன் ரூ.1500-க்கு மேல் விலை போகிறது. முழு அளவில் உற்பத்தி தொடங்கினால் இந்த விலை குறையும். எப்படி இருந்தாலும் இந்த ஆண்டு ரூ.1000-க்கு கீழே வராது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒரு டன் உப்பு ரூ. 500 முதல் ரூ. 600 வரை தான் இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி தொடங்கிவிட்டதால் அடுத்த வாரத்தில் இருந்து குஜராத் உப்பு வரத்து நின்றுவிடும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT