Published : 02 Jun 2015 07:37 PM
Last Updated : 02 Jun 2015 07:37 PM

மூன்றாவது முறை நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டமா? - மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

மத்திய பாஜக அரசு இந்தியாவிலே இதுவரை இல்லாத முன்மாதிரியாக, விடாப்பிடியாக மூன்றாவது முறையாகவும், கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்தை மறு பிரகடனம் செய்வதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்திருக்கிறார். பாஜக அரசு மேற்கொள்ளும் இந்தப் பிற்போக்கு நடவடிக்கையை கண்டிக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய பாஜக அரசு இந்தியாவிலே இதுவரை இல்லாத முன்மாதிரியாக, விடாப்பிடியாக மூன்றாவது முறையாகவும், கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்தை மறு பிரகடனம் செய்வதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்திருப்பதாக ஏடுகளிலே செய்தி வந்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், இந்த நில அவசரச் சட்டத்தை, மாநிலங்களவையிலே கொண்டு வர முயற்சித்து, அதனை நிறைவேற்ற முடியாத காரணத்தால், தற்போது நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு மீண்டும் அனுமதி அளித்து பிரகடனம் செய்ய வேண்டுமென்று குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை செய்த பரிந்துரையை ஏற்று அதற்கு அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இது ஜனநாயக மரபுகளுக்குப் புறம்பாகவும், கருத்துரிமைக்குக் கதவடைப்பு செய்யும் காரியமாகவும் அமைந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டப் படி 80 சதவிகித விவசாயிகள் ஒப்புதல் அளித்தால் தான், அந்த நிலத்தை அரசு இந்தச் சட்டத்தின்படி கையகப்படுத்த முடியும். மேலும், ஐந்தாண்டு காலத்திற்குள் அந்த நிலத்தைப் பயன்படுத்தா விட்டால், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை, அந்த விவசாயிகளிடமே திருப்பி அளிக்க வேண்டும் என்றெல்லாம் விதிகள் சேர்க்கப் பட்டிருந்தன.

விவசாயிகளின் நலனுக்கு எதிராக, இந்தப் பிரிவுகளை யெல்லாம் தற்போது நீக்கி விட்டுத்தான் இந்த மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டு, பாஜகவுக்கு உள்ள பெரும்பான்மை காரணமாக நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மாநிலங்களவையிலே இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.மேலும், 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில், பாஜக அரசு தற்போது கொண்டு வந்துள்ள திருத்தங்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இதற்காக அவசரச் சட்டம் பிறப்பித்திருப்பதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

இந்த இருமுனை நடவடிக்கை பாஜக வின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது. பாஜக அரசு என்ன காரணத்தால் இதிலே இவ்வளவு பிடிவாதமும், தீவிரமும் காட்டுகிறது என்றும் தெரியவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி , இந்த நிலம் கையகப்படுத்துதல் சட்ட முன் வடிவு தன்னைப் பொறுத்தவரையில் வாழ்வா சாவா பிரச்சினை அல்ல என்றும் அறிவித்துள்ள நிலையில், பிரதமரின் அறிவிப்புக்கு முரணாக மூன்றாவது முறையாகவும் எதற்காக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பது மக்கள் மத்தியில் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

யாரோ தனி நபர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் உதவிட வேண்டுமென்ற எண்ணத்திலே இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்படுகிறதோ என்ற சந்தேகமும் நாட்டில்பரவலாக ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிடிவாதமாக பாஜக அரசு மேற்கொள்ளும் இந்தப் பிற்போக்கு நடவடிக்கைக்குத் திமுக சார்பில் என் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x