Published : 04 Jun 2015 10:40 AM
Last Updated : 04 Jun 2015 10:40 AM
பள்ளிக் கட்டண விவகாரத்தால் சர்ச்சைக்குள்ளான சென்னை பால வித்யா மந்திர் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ் ராகவன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான சுற்றறிக்கை புதன் கிழமை இரவு அனைத்து பெற்றோர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக எஸ்.சுஜாதா புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதே பள்ளியின் பெருங்குடி கிளையில் முதல்வராக பணியாற்றியவர் ஆவார்.
சென்னை, அடையாறு காந்திநகரில் உள்ள, 'பாலவித்யா மந்திர்' என்ற பள்ளி, சிபிஎஸ்இ., பாடத் திட்டத்தில் நடத்தப்படுகிறது. அங்கு, 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ளன.
அந்த பள்ளியில், அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட, அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோருக்கு மேலும் ஒரு நெருக்கடி வைக்கப்பட்டது. அதில் கட்டண விவகாரத்தில் 'விருப்பம் - 1, விருப்பம் - 2' என்ற ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
அதில், விருப்பம்-1-ன் கீழ், பெற்றோர்கள் சிங்காரவேலன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்தைச் செலுத்தினால், தினசரி, 4:54 மணி நேரம் மட்டும் வகுப்பு நடத்தப்படும், சிறப்பு கல்வி வசதிகள் வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
விருப்பம்-2-ன் கீழ், பள்ளி நிர்வாகம் நிர்ணயிக்கும் கட்டணம் செலுத்தினால் காலை 8:30 முதல் மாலை, 3:40 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும், 59 வகையான சிற்ப்பு கல்வி சேவைகள் வழங்கப்பட்டு சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனை எதிர்த்து பெற்றோர்கள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பள்ளிக் கட்டண விவகாரம் தொடர்பாக சிங்காரவேலர் குழு தனது விசாரணையை துவக்கவிருந்தது. ஆனால், அதற்குள் சர்ச்சைக்குள்ளான சென்னை பால வித்யா மந்திர் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ் ராகவன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT