Last Updated : 08 Jun, 2015 07:45 PM

 

Published : 08 Jun 2015 07:45 PM
Last Updated : 08 Jun 2015 07:45 PM

தொடரும் அலைக்கழிப்பால் அதிருப்தி: ‘அம்மா’சிமென்ட் கிடைக்காமல் ஏமாற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்மா சிமென்ட்க்கு விண்ணப்பித்த பயனாளிகள் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருவதால் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒப்பந்ததாரர்களுக்கு தாரைவார்ப் பதாக புகார் எழுந்துள்ளது.

சிமென்ட் விலை கடும் ஏற்றமடைந்துள்ள நிலையில் வீடுகள் கட்டும் நடுத்தர குடும்பத்தினர் அரசின் மானிய விலையிலான அம்மா சிமென்டை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன் கோடு, தேவாளை, மேல்புறம் உட்பட 9 ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் அம்மா சிமென்ட் விநியோகம் செய்யப்படுகிறது. தரமான இந்த சிமென்ட்டை விநியோகம் செய்வதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முடிந்த அளவு தவிர்த்து வருவதாக பயனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பலன் தருவதாக உள்ளது

கன்னியாகுமரியை சேர்ந்த சேகர் என்பவர் கூறும்போது, ‘தனியாரில் ரூ.380 வரை சிமென்ட் விற்கும் நிலையில் அரசின் மாநிய விலை சிமென்ட்டான அம்மா சிமென்ட் பாதி விலையில் அதாவது ரூ.190-க்கு கிடைப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகுந்த பலன் தருவதாக உள்ளது.

ஆனால் சிமென்ட்டை பெறுவதற்குள் பயனாளிகள் பெரும் சிரமமடைய வேண்டியுள்ளது. இரண்டு சதுர அடிக்கு ஒரு மூட்டை சிமென்ட் வீதம் வழங்குகின்றனர். இதற்கான விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட கிராம அதிகாரியின் அனுமதிக்கு கொண்டு சென்றால் அவர்கள் கையொப்பம் இடவே மறுக்கின்றனர்.

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி, தென்தாமரைக் குளம், லீபுரம், மயிலாடி உட்பட 12 கிராம ஊராட்சிகளிலும், 8 பேரூராட்சிகளிலும் இதுபோன்ற நிலை நிலவுகிறது’ என்றார் அவர்.

வெளிமார்க்கெட்டில் விற்பனை

வருவாய் துறை அனுமதி அளித்தபின் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் அம்மா சிமென்ட் பெரும்பாலும் மறைமுகமாக ஒப்பந்ததாரர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அம்மா சிமென்ட் டுக்கு விண்ணப்பித்து 2 மாதங்களுக்கு பின்பு பெற்ற பயனாளி ஒருவர் கூறும்போது, ‘அரசின் திட்டப்படி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்காமல் தனியார் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு விதிமுறையை மீறி சிமென்ட் வழங்குகின்றனர். ரூ.190 மதிப்புள்ள சிமென்ட் மூட்டையை ரூ.300 வரை கொடுத்து வாங்க அவர்கள் தயாராக உள்ளனர். எனவே அம்மா சிமென்ட் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவு காலதாமதம் செய்கின்றனர்.

வீடுகட்டும் இடத்தை பார்வை யிட வருவதிலும் காலம் கடத்துகின்றனர். இதனால் விண்ணப்பித்த பலர் சிமென்ட் பெற வருவதில்லை. அவசர தேவைக்கு தனியாரிடமே சிமென்ட் வாங்கி பயன்படுத்துகின்றனர். அவ்வாறு வாங்காதவர்களின் சிமென்ட்டுகளை வெளிமார்க்கெட் டில் விற்கின்றனர். குறிப்பாக அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிமென்ட் வழங்கும் பிரிவில் தனியார் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இத்திட்டத்தை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார் அவர்.

தயக்கமின்றி அனுமதி

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டபோது, ‘மாதம் 4 ஆயிரம் கிலோவுக்கு மேல் அம்மா சிமென்ட் விநியோகம் செய்து வருகிறோம். சிமென்ட் சிலநேரம் வர தாமதம் ஆகிறது. இருப்பு இருந்தால் உடனடியாக கொடுத்துவிடுகிறோம். பயனாளி களை அலைக்கழிக்க வில்லை’ என்றனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் அம்மா சிமென்ட் வழங்குவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட தயங்குவது குறித்து அகஸ்தீஸ் வரம் வட்டாட்சியர் பெர்ன்சிற்றாள் வாசுகியிடம் கேட்டபோது, ‘அகஸ்தீஸ்வரம் வட்டத்துக்கு உட்பட்ட சில கிராம நிர்வாக அலுவலர்கள் அம்மா சிமென்ட் வழங்குவதற்கான அனுமதிக்கு கையெழுத்திட மறுப்பதாக தொடர் புகார்கள் வந்தன. இதுபற்றி விசாரித்தபோது அந்த விண்ணப்பத்தில் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத வாசகம் இருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பாதிக்காத வகையில் விண்ணப்பங்கள் மாற்றி வழங்கப் படுகிறது. எனவே இப்போது தயக்கமின்றி அனுமதி வழங்கி வருகின்றனர்’ என்றார் அவர்.

ஆட்சியர் அதிரடி ஆய்வு!

அம்மா சிமென்ட் விநியோகத்தில் பயனாளிகள் அலைக்கழிக்கப்படுவது குறித்து கன்னியாகுமரி ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவானுக்கு புகார்கள் சென்றன. அவர் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிமென்ட் வழங்கும் பிரிவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஊரக வளச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி மற்றும் அலுவலர்கள் இருந்தனர். அம்மா சிமென்ட் இருப்பு மற்றும் விநியோக விவரம், நிலுவையில் உள்ள பயனாளிகளின் விண்ணப்பம் குறித்து கேட்டறிந்தார். காலம் கடத்தாமல் விண்ணப்பதாரர்களுக்கு சிமென்ட் வழங்க அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x