Published : 04 Jun 2015 04:02 PM
Last Updated : 04 Jun 2015 04:02 PM
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் பிற நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கொளுஞ்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் தாமோதரன் (29). அதே பகுதியில் கடை வைத்திருந்த இவர், கடந்த 31-ம் தேதி பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் கொடைரோடுக்கு சென்றார்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த தாமோதரன் மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
எனவே, நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருந்த அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்களை தானமாக வழங்க அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் பேசினர். உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து சென்னை பிரண்டியர்லைன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு தாமோதரனின் இதயமும், மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு கல்லீரலும் அனுப்பப்பட்டது.
அவரது கருவிழிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 நோயாளிகளுக்கும் தானமாக வழங்கப்பட்டன.
இதுகுறித்து சிறுநீரகவியல் துறை தலைமை மருத்துவர் சம்பத்குமார் கூறியதாவது: மூளைச்சாவு அடைந்த நோயாளிகளின் சிறுநீரகங்களை எடுத்து, மற்றவரின் உயிரை காப்பாற்றுவது சிறப்பான செயல். இதுகுறித்து மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளை காப்பாற்றலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT