Published : 21 Jun 2015 08:54 AM
Last Updated : 21 Jun 2015 08:54 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவு கலந்தாய்வு: அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல் நாளில் 501 இடங்கள் ஒதுக்கப்பட்டன

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 501 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா சாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது.

முதல்நாளில் சிறப்புப் பிரிவினருக்கான 76 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் ஒரு பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் 68 இடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக் கான பிரிவில் 5 இடங்கள், விளையாட்டு வீரர் பிரிவினருக்கான 3 இடங்கள் என 77 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

502 இடங்கள் ஒதுக்கீடு

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில் கலந்து கொள்ள 510 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பட்டு இருந்தது. ஆனால், 502 பேர் மட்டுமே கலந்தாய்வுக்கு வந்திருந் தனர். காலை 9 மணி, பகல் 11 மணி மற்றும் பிற்பகல் 2 மணி என 3 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டது.

பொதுப் பிரிவு கலந்தாய்வு முதல் நாள் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 501 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட் டன. மேலும், தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவ ருக்கு எம்பிபிஎஸ் இடம் ஒதுக்கப் பட்டது. இன்று 2-ம் நாள் கலந்தாய்வில் பங்கேற்க 590 மாணவர் களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல்கட்ட கலந்தாய்வு வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களில் பெரும்பாலானோர், சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை தேர்ந் தெடுத்தனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) 177 இடங்கள், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 133 இடங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 52 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

முதல்நாள் கலந்தாய்வு முடிவில் சென்னை மருத்துவக் கல்லூரியில் 31, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 72, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 72 இடங்கள் காலியாக உள்ளன. மீதமுள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் பெரும் பாலான எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 84 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியலில் 14 மாணவர்கள், 3 மாணவிகள் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்து முதல் இடத்தைப் பிடித்தனர். இவர்கள் 17 பேரும் கலந்தாய்வில் சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்எம்சி) தேர்வு செய்தனர். முதல் இடம் பிடித்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த நிஷாந்த்ராஜன் கூறும்போது, ‘‘மருத்துவம் படித்து இதய சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பதே எனது லட்சியம். அதனால் பாரம்பரியம் மிக்க சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x