Published : 22 Jun 2015 09:32 PM
Last Updated : 22 Jun 2015 09:32 PM

மகத்தான வெற்றியே என் லட்சியம்: ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் ஜெயலலிதா சூளுரை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே தனது லட்சியம் என முதல்வர் ஜெயலலிதா சூளுரைத்தார். | வீடியோ இணைப்பு கீழே |

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 27-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா, திங்கள்கிழமை மாலை பிரச்சாரம் செய்தார். திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் அவர் பேசியதாவது:

கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதி யில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெற்றிவேலை, எனது வேண்டுகோளை ஏற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள்.

இந்த இடைத்தேர்தல், நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல். பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அரசியல் சதியால் போடப்பட்ட வழக்கால், இடைப்பட்ட சிறிது காலத்துக்கு நான் முதல்வராக இல்லாத சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த இடைத்தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இப்போது நானே இங்கு போட்டியிடுகிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரை தோற்கடிப்பது என்பது வேறு. ஆனால், இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே எனது லட்சியம்.

மக்கள் மனதில் இடம் பெற்றிருக் கும் என்னையும், அதிமுகவையும் வெல்ல முடியாது என்பதால் தான், எதிர்க்கட்சிகள் போட்டியிட வில்லை. ஆனால், அதற்கு பல கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றன.

பிறரின் குறைகளைச் சொல்லி வாக்குகளை கேட்க நான் இங்கு வரவில்லை. நாங்கள் செயல்படுத் திய சமூகநல, வளர்ச்சி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்குகளை கேட்கவே வந்திருக்கிறேன்.

மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 4,992 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளோம். இதனால் தொழில் வளர்ச்சி பெருகியுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி இருக்கிறோம். ரூ. 41 கோடியில் துணை மின் நிலையப் பணிகள் நடந்துள்ளன. கடந்த 4 ஆண்டு களில் இந்தத் தொகுதியில் 14,313 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிதில மடைந்த வீடுகளுக்குப் பதிலாக ரூ.101 கோடியில் 1,500 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

44,596 குடும்பங்களுக்கு விலை யில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு விரைவில் வழங்கப்படும். 32,609 பேர் ரூ.1,000 மாத ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 14 புதிய வழித்தடங்களில் 36 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொகுதியில் மட்டும் 10 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

ஆர்.கே.நகரில் ரூ.2.77 கோடி யில் 10 குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் 236 தெருக்களில் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது. ரூ.242 கோடியில் மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், சாலைகள் அமைக்கும் பணிகள் சென்னை மாநகராட்சியால் செய்யப்பட்டுள் ளன. நடப்பாண்டில் ரூ. 36 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி ஏராளமான பணிகளை ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்காக செய்திருக்கிறோம்.

இங்கே, என்னை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் போட்டியிடுகிறார். இதே கட்சி யைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையில் என்னையும், அதிமுக அரசையும் பாராட்டி பேசியுள் ளனர். ஆனால், இன்று என்னை எதிர்த்து போட்டியிடுவதால் வேறு வழியின்றி எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

"மக்களால் நான், மக்களுக் காகவே நான்" என்ற அடிப்படை யில் எப்போதும் செயலாற்றி வருகிறேன். எனக்கு எல்லாமே நீங்கள்தான். உங்கள் எதிர்பார்ப்பு களை நிறைவு செய்யும் வகையில் உங்களுக்காக எப்போதும்போல பாடுபடுவேன்.

எங்களது சாதனைகளை சீர்தூக்கிப் பார்த்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் வகையில் நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்த ஜெயலலிதா, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, விடுதலை யானதும் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். பதவியேற் பதற்கு முதல்நாள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது மக்களை சந்தித்தார். ஆனால், எதுவும் பேசவில்லை. 9 மாதங்களுக்குப் பிறகு ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் நேற்று பொது மக்கள் மத்தியில் ஜெயலலிதா உரையாற்றினார்.