Published : 28 Jun 2015 02:43 PM
Last Updated : 28 Jun 2015 02:43 PM

பொள்ளாச்சியில் போலி ஹெல்மெட் விற்பனை: தரமானதை வாங்க போலீஸார் அறிவுறுத்தல்

பொள்ளாச்சியில் போலி ஹெல்மெட்டுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதால், விலை அதிகமாக இருந்தாலும் தரமானதை வாங்குமாறு, பொதுமக்களை போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், கடைகளில் ஹெல்மெட் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதை சாதகமாக்கி, போலியான ஹெல்மெட்டுகளும் விற்பனைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹெல்மெட் அணியாமல் போலீஸாரிடம் பிடிபடுபவர்கள், இந்திய தர நிறுவனச் சான்றிதழ் (ஐஎஸ்ஐ) ரசீதுடன் தாக்கல் செய்தால் மட்டுமே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், உரிமம் மற்றும் ஆவணங்களை பெற முடியும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தரம் இல்லாத ஹெல்மெட்டுகளிலும் ஐஎஸ்ஐ சான்று அச்சிடப்பட்டுள்ளது. இதனால், போலியை கண்டறிவதில் பொதுமக்களுக்கு சிரமம் உள்ளது.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:

விலை குறித்து சிந்திக்காமல் தரமான ஹெல்மெட்டுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். ஐஎஸ்ஐ சான்று உள்ளதை வாங்க வேண்டுமென்பதற்காகவே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், மலிவானவற்றில்கூட முத்திரைகள் சரியாக உள்ளன.

எனவே, ஹெல்மெட்டின் பின்புறம் தயாரிப்பு நிறுவனப் பெயருடன், ஐஎஸ் 4151 என்ற எண்ணுடன் 4:3 என்ற அளவில் ஐஎஸ்ஐ முத்திரை இருக்க வேண் டும். அதற்கு கீழ் CM/L என்ற எழுத் துடன், ஏழு இலக்க எண் இருக்க வேண்டும். இவை அனைத்துமே, அரசு விதிகளின் படியான அளவுகளில் வெள்ளை நிறத்தில் இருக்கும். வேறு நிறங்களில் எழுதி இருந்தால் அவை போலி. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இலவச ஹெல்மெட்டுகள்

தற்போதைய சூழலைப் பயன்படுத்தி பலர் வணிக ரீதியாக, மக்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஒரு மூட்டை அரிசி வாங்கினால், ஐஎஸ்ஐ தரச் சான்றுடைய ஹெல்மெட் இலவசம் என்ற அறிவிப்பை, ஒரு வணிக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம் என பல்வேறு வகைகளில் விற்பனையை சூடுபறக்கச் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x