Published : 20 May 2014 10:51 AM
Last Updated : 20 May 2014 10:51 AM
தோல்விக்கு பொறுப்பேற்று யாரும் ராஜினாமா செய்யத் தேவையில்லை. ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் புதுவை உள்பட 35 தொகுதிகளிலும் போட்டி யிட்டு, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் திமுக படுதோல்வி அடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் பிரச்சார நாயகனாக கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்தார்.
சுமார் 2 மாதங்கள் அவர் தமிழகம் முழுவதும் சுறாவளிச் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். அவரது பிரச்சாரம் வெகுஜன மக்களையும் ஈர்த்ததாக தேர்தலின்போது திமுகவினர் பேசிக்கொண்டனர்.
ஆனால், தேர்தல் முடிவு ஏமாற்றம் தந்ததால் தோல்விக்கான பொறுப்பு முழுவதும் ஸ்டாலின் மீது விழுந்துள்ளது. இதனால், தோல்விக்கு பொறுப்பேற்று கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய மு.க.ஸ்டாலின் முன்வந்தார். அதை கருணாநிதி ஏற்கவில்லை.
தொண்டர்களும் வீட்டு முன்பு திரண்டு போராட்டம் நடத்தியதால், தனது முடிவை ஸ்டாலின் கைவிட்டார்.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் கருணா நிதியை சந்திக்க திங்கள்கிழமை சென்னை வந்தனர். மாவட்டச் செயலாளர்கள் கே.என்.நேரு, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராணிப்பேட்டை காந்தி, ஏ.கே.எஸ்.விஜயன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பொங்க லூர் பழனிச்சாமி, என்.கே.கே.பி. ராஜா, வெள்ளக்கோவில் சாமி நாதன், செங்குட்டுவன், பெரியகருப் பன், தூத்துக்குடி பெரியசாமி, ஐ.பெரியசாமி மற்றும் பெரியண்ணன் அரசு உள்ளிட்டோர் கருணாநிதியை அவரது கோபால புரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். பின்னர், மு.க.ஸ்டாலி னை அவரது தேனாம்பேட்டை இல்லத் தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ஸ்டாலினிடம் கட்சியை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். சுதந்திரமாக முடிவு களை எடுக்கும் அதிகாரத்தையும் தர வேண்டும் என்று சில மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவித்த தாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சில மாவட்டச் செயலாளர்கள் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்தத் தகவல் தெரிந்ததும், மாவட்டச் செயலாளர்களை அழைத்து, ‘யாரும் ராஜினாமா செய்யத் தேவையில்லை. கோஷ்டிப்பூசல் எதுவும் இல்லாமல் கட்சியை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள்’ என்று கருணா நிதி அறிவுரை கூறியதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜகவுடன் சுமுக உறவு?
பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். பொருளாளர் மு.க.ஸ்டாலினும் போனில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, கருணாநிதியின் உடல்நலம் குறித்து மோடி விசாரித்ததாக ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலியின் முதல் பக்கத்தில் மோடி தொடர்பான செய்திகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டுள்ளது.
மோடிக்கு வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டு தலைவர்கள், மோடிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்தும் முரசொலியிலும் திமுகவின் அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் கருணாநிதியின் ட்விட்டர் பக்கத்திலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் 26-ம் தேதி 2ஜி வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT