Published : 24 Jun 2015 08:10 PM
Last Updated : 24 Jun 2015 08:10 PM

7000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் முடக்கப்பட்டது ஏன்? - ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டில் 1,000 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கும் 7,000 கோடி ரூபாய் நெடுஞ்சாலை திட்டங்கள் மாநில அரசின் அக்கறையற்ற அணுகுமுறையால் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் இன்று எழுதியுள்ள முகநூல் பதிவில், ''அதிமுக அரசின் நான்காண்டு காலம் முறைகேடான நிர்வாகம் மற்றும் மோசமான ஆட்சியாகவே இருந்திருக்கிறது. இது உள்கட்டமைப்பு பிரிவில் மிகவும் அப்பட்டமாக தெரிகிறது.

பல ஆண்டுகளாக நெடுஞ்சாலை திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டு வருவதால், மாநிலத்தின் தொழில்துறை மேலும் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்துதல் மற்றும் தேவையான அனுமதிகளுக்காக மாநில அரசை எதிர்பார்த்து நிற்கிறது. ஆனால், மாநில அரசோ சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை.

தமிழ்நாட்டில் 1,000 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கும் 7,000 கோடி ரூபாய் நெடுஞ்சாலை திட்டங்கள் மாநில அரசின் இந்த அக்கறையற்ற அணுகுமுறையால் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் மாதவரம் மற்றும் புழலுக்கு இடையேயான 10 கிலோமீட்டர் நீள சாலைத் திட்டம் நிலம் கையகப்படுத்தல் செயல்முறை மாநில அரசால் நிறைவுசெய்யப்படாத காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. சென்னையுடன் இணைப்பை மேம்படுத்த அத்தியாவசியமான, 1815 கோடி ரூபாய் சென்னை துறைமுகம்-மதுரவாயல் விரைவுப்பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த மாதம்தான் 407 கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கும் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களால் மாநிலத்துக்குள் மற்றும் மற்ற மாநிலங்களுடனான இணைப்பு மேம்படுத்தப்படும். எனினும், உள்கட்டமைப்பு மீது அதிமுக அரசு தனது அக்கறையற்ற போக்கை தொடர்ந்தால், இந்தத் திட்டங்கள் காகிதத்தில் வெறும் உத்தேச திட்டங்களாகவே தங்கிவிடும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x