Published : 19 Jun 2015 12:44 PM
Last Updated : 19 Jun 2015 12:44 PM

லேஸர் சிகிச்சை மூலம் காது கேட்கும் திறன் பெற்ற மதுரை இளைஞர்: சிவகங்கை அரசு மருத்துவர்கள் சாதனை

சிவகங்கை

தென்தமிழகத்தில் முதல் முறையாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 'என்டி-யாக்' என்னும் லேஸர் சிகிச்சை மூலம், காது கேட்கும் திறனை இழந்த இளைஞர் மீண்டும் காது கேட்கும் திறனை பெற்றுள்ளார்.

மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த சண்முகவேலு மகன் சங்கர்(31). இவர் சில ஆண்டுகளுக்கு முன் காது கேட்கும் திறனை இழந்தார். இவருக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேஸர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர் நாகசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் லேஸர் சிகிச்சை செய்து காது கேட்கும் திறனை அளித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர் நாகசுப்பிர மணியன் கூறியதாவது:

காதில் மூன்று எலும்புகள் உள்ளன. நாம் கேட்கும் சத்தம் மூளைக்கு போவதற்கு இந்த எலும்புகள் முக்கியம். 'ஸ்டேப்பிஸ்' எனும் 3-வது எலும்பு கடைசியாக இருக்கும். இது உடம்பில் உள்ள எலும்புகளில் மிகச்சிறியது. அந்த மூன்றாவது எலும்பு அசையாமல் ஒட்டிக்கொள்ளும். பிறவியிலேயே சிலருக்கு இதுபோல ஏற்படும்.

எனவே, அந்த எலும்பை வெட்டிவிட்டு அதற்குப் பதிலாக 'டெப்லான் டிஸ்ட்டன்' போடுவோம். நகத்தைவிட மெல்லிய அந்த எலும்பை துண்டிக்கும்போது கருவிகளை பயன்படுத்தினால் உள்காது பாதிக்கும் வாய்ப்புள்ளது. அது நரம்பு பகுதியை பாதித்தால் மொத்தத்தில் காது கேட்காமல் போகும்.

ஆனால், இந்த நவீன 'என்டி-யாக்' லேஸர் கருவி மூலம் நேரடியாக சிகிச்சை அளிக்கலாம். இதன்மூலம் நூறு சதவீதம் காது கேட்கும் திறன் கிடைக்கும்.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், வேலூர் ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் வேறு துறையில் வேறு காரணங்களுக்கு இந்த சிகிச்சை முறையை பயன்படுத்துகின்றனர். ஆனால், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காதுக்கு பயன்படுத்துவது இது முதல்முறை.

காது, மூக்கு, தொண்டை பிரிவில் ரத்தக் கசிவுள்ள புற்றுநோய்களுக்கு பயன்படுத்தலாம். இந்தக் கருவி ரூ.50 லட்சம். காலையில் சிகிச்சைக்கு வந்தால் மாலையில் சென்றுவிடலாம். அந்த அளவுக்கு எளிய சிகிச்சை முறை என்றார்.

மருத்துவக் கல்லூரி முதல்வர் நசீர்அகமது சையது கூறுகையில், தனியார் மருத்துவ மனையில் இச்சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்து கொள்ளலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x