Published : 01 Jun 2015 12:05 PM
Last Updated : 01 Jun 2015 12:05 PM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியில்லை: உயர்நிலைக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை முற்றாகப் புறக்கணிப்பது என்று மதிமுக தீர்மானித்துள்ளது.

மதிமுக உயர்நிலைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் முதல் தீர்மானமாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை முற்றாகப் புறக்கணிப்பது என்பது இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்மைக்காலமாக, தேர்தல் என்பது போட்டியிடும் கட்சிகளின் லட்சியங்களையும், செயல்பாட்டினையும் மக்கள் துலாக்கோல் நிலையில் ஆய்வதற்குப் பதிலாக, பணத்தை வாக்காளர்கள் எடை போட்டுப் பார்க்கும் நிகழ்வாகி விட்டது.

அதிலும் இடைத்தேர்தலில் அரசு அதிகாரம் ஆளுங்கட்சியின் எடுபிடியாக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு 1000 முதல் 5000 வரை பணம் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கும் இலஞ்ச பேரமாக மாறிவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை ஆகும். இதைத் தமிழக மக்கள் அனைவரும் அறிவார்கள்.

எதேச்சாதிகாரமும் சர்வாதிகாரமும் ஜனநாயகத்தை அழிக்க முனைவதும், அதனை எதிர்த்து மக்கள் புரட்சி வெடிப்பதும் நடைபெற்றாலும், அதைவிடப் பேராபத்தாக ஊழல் பணத்தால் ஓட்டுகளை விலைக்கு வாங்குகின்ற அக்கிரமம் தற்போது தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நச்சுச் சுழலில் இருந்து தமிழகம் மீட்கப்பட வேண்டும்.

வளரும் இளைய தலைமுறையினரும், மாணவர் உலகமும் கிளர்ந்து எழுந்து ஆவேசமாகக் களம் காணும் ஒரு ஜனநாயகப் புரட்சி ஏற்பட வேண்டும். ஆனால் அத்தகைய நிலைமை உடனடியாகப் புலப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், தலைநகர் சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதியில், அனைத்து இந்திய அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் போட்டியிடுகிறார். பணத்தை வெள்ளமாகப் பாய விட ஏற்பாடுகள் தயார்.

தன்மானத்தையும், சுயமரியாதையையும் முன்னிறுத்தி 2011 பொதுத் தேர்தலை மறுமலர்ச்சி தி.மு.கழகம் புறக்கணிக்க நேர்ந்தது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், மக்கள் மன்றத்தின் பேராதரவு எங்கள் இயக்கத்திற்கு ஆதரவாகத் தென்பட்ட நிலையிலும், ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் தொகுதி முழுவதும் படை எடுத்ததால், கிடைக்க வேண்டிய வாக்குகளும் கழகத்திற்குக் கிடைக்கவில்லை.

ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை இடைத்தேர்தல்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்தது. அந்த இரண்டு தொகுதிகளிலும் இன்றைய ஆளும் கட்சியின் பணம் கங்கை வெள்ளமாகப் பாய்ந்தது.

காவிரி உரிமை உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், உழவர் மீனவர் துயர் துடைக்கவும், தமிழ் ஈழ விடியல் காணவும், அடுக்கடுக்கான அறப்போர்க் களங்களைத் தமிழகத்தில் மட்டும் அன்றி, மத்தியப் பிரதேசத்திலும் தலைநகர் தில்லியிலும் நடத்திடும் நெஞ்சுரமும், துணிவும், தியாக சித்தமும் படைத்த இலட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட இயக்கம்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

நேர்மையின் நெருப்பாகத் திகழும் எமது இயக்கம், 21 ஆண்டுகளாகத் தன்னலம் இன்றித் தங்களை வருத்திக் கொண்டு, நடுத்தர அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த எமது உயிரான தோழர்கள் நலனையும் கருத்தில் கொண்டு, தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் முறைப்படி 11 மாதம் கழித்தும் வரலாம்; அல்லது தேர்தல் ஆணையத்தின் சமிக்ஞையோடு, இந்த ஆண்டு டிசம்பருக்குள் ஒருவேளை வரவும் கூடும் என்ற நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையமும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியும் நேர்மையான தேர்தல் குறித்து விடுக்கும் அறிக்கைகளுக்குக் குப்பைக் காகிதத்திற்குள்ள மதிப்பு கூடக் கிடையாது என்ற உண்மையையும் மனதில் கொண்டு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை முற்றாகப் புறக்கணிப்பது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானிக்கின்றது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x