Published : 10 Jun 2015 08:10 AM
Last Updated : 10 Jun 2015 08:10 AM

கூடங்குளம் அருகே குண்டுகளை வீசி மீனவர்கள் மோதல்: 3 பேர் காயம்; போலீஸ் வாகனம் சேதம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 3 மீனவர்கள் காயமடைந்தனர். நாட்டு வெடிகுண்டு வீச்சில் போலீஸ் வாகனம் சேதமடைந்தது.

கூத்தங்குழி மீனவ கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் இரு பிரிவாக செயல்பட்டு வருவதால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்காக இருதரப்பினரும் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து கடற்கரையில் புதைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மோதலின்போது இரு தரப்பினரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கூடங்குளம் அணு உலையிலிருந்து சில கி.மீ. தூரத்தில் இடிந்தகரை சுனாமி காலனியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது, அவை வெடித்து சிதறியதில் கூத்தங்குழியைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.

திருமண ஊர்வலம்

கடந்த 7-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சவாரீஸ் என்பவரது மகன் இருதயத்துக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது மணமக்கள் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆடிப் பாடியபடி சென்றுள்ளனர். அப்போது அவர்கள் எதிர்தரப்பினரின் தெரு வழியே சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு தரப்பினர் இடையே மோதல் மூண்டது. கூடங்குளம் சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தை புறக்கணிப்பு

நேற்று முன்தினம் இந்தப் பிரச்சினை தொடர்பாக ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. இதற்காக இரு தரப்பு மீனவர்களும் வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் ஒரு தரப்பினர் இந்தக் கூட்டத்தை புறக்கணித்ததால் கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

போலீஸ் வேன் மீது குண்டுவீச்சு

நேற்று காலை கூத்தங்குழி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர். அப்போது இரு தரப்பு மீனவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது போலீஸ் வேன் மீதும் குண்டு வீசப்பட்டது. குண்டு வெடித்ததில் போலீஸ் வாகனத்தின் முன்பகுதி, மேற்கூரை சேதம் அடைந்தது. குண்டுகள் வெடித்ததில் ஜோன்ஸ், திலக்குமார், ஸ்டீபன் ஆகிய 3 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் நாகர்கோவி லில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் வடக்கு தெருவில் 4 வீடுகளும், ஒரு சில நாட்டுப் படகுகளும் சேதமடைந்தன.

60 குண்டுகள் வெடித்தன

வள்ளியூர் டிஎஸ்பி பாலாஜி, கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஹட்சன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். போலீஸார் வந்ததும் மோதலில் ஈடுபட்ட மீனவர்கள் நாட்டுப் படகுகளில் கடல் வழியாக அருகிலுள்ள கிராமங்களுக்கு தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் காரணமாக கூத்தங்குழி பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி விக்ரமன் அப்பகுதியை பார்வையிட்டார். அப்பகுதியில் வேறு நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என சோதனையிட உத்தரவிட்டார். போலீஸார் ஒவ்வொரு பகுதியாக சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிக்காத குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த மோதலின்போது 60-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

வெடிகுண்டு கலாச்சாரம்

கூத்தங்குழியில் வெடிகுண்டு கலாச்சாரம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அப்போது முதல் இதுவரை தொடர்ந்து கூத்தங்குழி மீனவர்கள் இரு பிரிவாகவே செயல்பட்டு வருகிறார்கள். கூத்தங்குழியில் 50-க்கும் மேற்பட்ட முறை வெடிகுண்டு வீசி மோதல் நிகழ்ந்துள்ளது. இதில் 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x