Published : 28 Mar 2014 09:36 AM
Last Updated : 28 Mar 2014 09:36 AM
கூட்டணிக் கட்சிகளிடையே சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள் என்று கூட்டணிக் கட்சித் தொண்டர்களுக்கு தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவுரை கூறினார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி, பாஜக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் மல்லை சத்தியா நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து, தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த், காஞ்சிபுரம் தேரடியில் வியாழக்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
முதல்வர் ஜெயலலிதா, உணவகம், மருந்தகம், குடிநீர் விற்பனையைத் தொடங்கி அம்மா பெயரை வைத்துக்கொண்டார். ஆனால் அவர் தொடங்கிய டாஸ்மாக்கிற்கு அம்மா பெயரை வைத்திருக்கலாமே. இதற்கு அதிமுகவினரால் பதில் சொல்ல முடியாது.
காஞ்சிபுரத்தில் மணல் கொள்ளையும் கொலைகளும் தொடர்கதையாகி உள்ளன. இங்கு காவல் துறை, ஏவல் துறையாக உள்ளது. குடும்ப அட்டைக்கு மணல் விற்பதாக அரசு அறிவிக்கிறது. போலி அட்டைகளைத் தயாரித்து வைத்திருக்கும் அதிமுகவினரே அந்த மணலை வாங்கி, வெளியில் விற்றனர். அதற்காக 2-வது விற்பனைக்கும் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தமிழக மக்கள் மாறி மாறி வாக்களித்து ஏமாந்தது போதும். எங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தாருங்கள். எங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளர் மல்லை சத்தியாவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை நாங்கள் கொடுக்கிறோம். மத்தியில் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்ய வேண்டுமென்றால், நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால், மோடி பிரதமராக வேண்டும். அதற்கு எங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். கூட்டணி கட்சிகளிடையே பிரச்சினைகள் இருக்கலாம். அதை பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். அதற்காக சண்டையிட்டுக்கொள்ளாதீர்கள் என்றார் அவர்.
கூட்டத்தினர் ஏமாற்றம்
காஞ்சிபுரத்திற்கு மாலை 5.10 மணிக்கு வந்த விஜயகாந்த், 5.27 மணி வரை, 17 நிமிடங்கள் மட்டுமே பேசினார். இவரைப் பார்க்கவும் இவரது பேச்சை கேட்கவும் ஏராளமான மக்கள் கூடினர். ஆனால் அவரது பேச்சில் சுவாரஸ்யம் இல்லாததாலும் அதிக நேரம் பேசாததாலும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த இல்லத்தரசிகளும் விஜயகாந்தை பார்க்க பிரச்சார கூட்டத்திற்கு வந்தனர். டிவியில் பார்ப்பது போன்ற ஆவேச பேச்சு, வேட்பாளருக்கு குட்டு வைப்பது, தொண்டர்களைப் பார்த்து திட்டுவது, முறைப்பது எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புவதாக தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT