Published : 09 Jun 2015 04:26 PM
Last Updated : 09 Jun 2015 04:26 PM

சாலை வேண்டி யாகம் நடத்திய கிராம மக்கள்: மேட்டுப்பாளையம் அருகே நூதனப் போராட்டம்

சீரமைக்காத சாலைக்கு 25-ம் ஆண்டு விழா கொண்டாடி, அதை சரிசெய்திட யாகம் வளர்த்து, பாகிஸ்தான் அதிபருக்கு மனு அனுப்பி நூதனப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிராம மக்கள்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது குமாரபாளையம் கிராமம். சிறுமுகை அருகே உள்ள மூடுதுறை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த சிறு கிராமம், விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டது.

இக்கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு விளையும் விளை பொருட்களை சந்தைப்படுத்தவும் பிற பொருட்களை வாங்கவும் மேட்டுப்பாளையம் நகரம் அல்லது புளியம்பட்டி பகுதிக்கு கிராம மக்கள் சென்றாக வேண்டிய நிலை உள்ளது.

ஆனால், இக் கிராமத்தின் இணைப்புச் சாலை, கடந்த 25 ஆண்டுகளாக செப்பனிடப்படாததால் குண்டும் குழியுமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் கிராம மக்கள். இரவு நேரங்களிலோ அல்லது மழைக் காலங்களிலோ பயணிக்கவே முடியாமல் தவிப்பதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், இது பற்றி பல முறை அதிகாரிகளிடமும், ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலனில்லையாம்.

எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 25 வயதான எங்கள் ஊர் தார் சாலைக்கு வெள்ளி விழா என்று பேனர் அச்சடித்து ஊருக்கு நடுவே வைத்து விழா நடத்தியுள்ளனர்.

இலவச மாட்டு வண்டி சேவை தொடக்க விழா, விரைவாக தார்ச் சாலை அமைக்க வேண்டி மகா கணபதி யாகம், பாகிஸ்தான் அதிபருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் இப்படி கிராம மக்கள் ஒன்றுகூடி இந்த விழாவை நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற கணபதி யாகத்தில் 400-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

யாகம் நடத்தும் கிராம மக்கள்

கிராம மக்கள் கூறியதாவது: ‘மழை வேண்டி வருணனை வேண்டுவோம். அதற்காக யாகங்கள் செய்வோம். எங்கள் ஊரில் பெரிய பிரச்சினையே 2 கிமீ தூர குண்டும் குழியுமான சாலைதான். எம்.எல்.ஏ, கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஆட்சியர் என்று மனு கொடுக்காத இடமில்லை. எதுவுமே கண்டு கொள்ளப்படவில்லை. கணபதி யாகம் நடத்தி இறைவனை வேண்டினால் அது நடக்குதோ இல்லையோ, மத்த ஊர் ஜனங்க கவனத்தை இதில் ஈர்க்க முடியும் இல்லீங்களா? அதுலயாவது விடிவு பிறக்கும் இல்லீங்களா? அதுக்குத்தான் யாகம் நடத்தியிருக்கோம்.

தவிர, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு மனு கொடுத்து எதுவும் எடுபடாததால வேற நாட்டு தலைவருக்கு மனு அனுப்பலாம்ன்னு யோசித்தோம். அந்த வகையில, பாகிஸ்தான் அதிபருக்கு மனு அனுப்புவது என முடிவு செய்தோம். இதுவும் அதிகாரிக கவனத்தை ஈர்க்கத்தான்’ என்றனர்.

இதுகுறித்து மூடுதுறை ஊராட்சி தலைவர் ராஜம்மாள் சுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு கருத்து கேட்டபோது, ‘அவங்க ரோடு போட்டு 25 வருஷமாச்சுன்னு சொன்னா நம்பலாங்களா? ஆறு வருஷங்களுக்கு முன்னாடி போட்ட ரோடுதாங்க அது. அப்ப கான்ட்ராக்ட் எடுத்தவங்க ஒரு கிமீ தூர ரோட்டுல எங்கெல்லாம் நல்லா இருக்கோ, அதையெல்லாம் விட்டுட்டு உடைஞ்சிருக்கிற பகுதியில் மட்டும் துண்டு துண்டா நாலு இடத்துல ரோடு போட்டுட்டு போயிட்டாங்க. ரோடு போடாத பகுதி, போன மழையில மோசமா போயி அங்கங்கே புட்டுகிட்டு நிக்குது. அதை சரிசெய்ய அதிகாரிகள்கிட்ட சொல்லி, எஸ்டிமேட் போட்டு அனுப்பியாச்சு. அடுத்தது டெண்டர் விடணும்.

அதை செய்யறதுக்குள்ளே, இப்படி யாகம் எல்லாம் நடத்த வேண்டாம்ன்னு சொல்லிப்பார்த்தோம். சில பேர் சொன்னதை கேக்காம செஞ்சிருக்காங்க. என்னங்க செய்யறது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x