Published : 19 Jun 2015 03:26 PM
Last Updated : 19 Jun 2015 03:26 PM
புதுச்சேரியில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட மேலும் 2 போலீஸாருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இவர்களுடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 4 போலீஸாருக்கு ஜாமீன் தரப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தலைமறைவாக உள்ள போலீஸார் இன்னும் கைது செய்யப்படவில்லை.
புதுச்சேரியில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பலாத்காரம் செய்தது தொடர்பாக 9 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் யுவராஜ், சப்இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு பண்டரிநாதன், போலீஸார் செல்வக்குமார், சங்கர் ஆகிய 5 பேர் சரண் அடைந்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சரண் அடைந்த 5 பேரும் ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம், புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டன.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் யுவராஜ், காவலர் சங்கர் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கிடையே புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர் செல்வகுமார் ஆகியோர் மனு செய்திருந்தனர். அதன் மீதான விசாரணை தலைமை நீதிபதி சிவி.கார்த்திகேயன் முன்பு இன்று நடைபெற்றது. அதை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறுமிகள் பாலியல் வழக்கில் 4 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது கைதானவர்களில் தலைமைக் காவலர் பண்டரிநாதனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
மேலும் 4 போலீஸார் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய 8 போலீஸாரும் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT