Last Updated : 11 Jun, 2015 10:40 AM

 

Published : 11 Jun 2015 10:40 AM
Last Updated : 11 Jun 2015 10:40 AM

திராவிட கொள்கைகளில் இருந்து திமுக விலகினால் கூட்டணியைவிட்டு வெளியேறுவோம்: முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.காதர் மொய்தீன் உறுதி

திராவிட கொள்கைகளிலிருந்து திமுக விலகினால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.காதர் மொய்தீன் கூறினார்.

இது தொடர்பாக அவர் ‘தி இந்து’ வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

இன்றைய அரசியல் சூழல் எப்படி உள்ளது, மோடியின் ஓராண்டு ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்தியா மதச்சார்பற்ற நாடென்பது 5 ஆயிரம் வருடத்து இயற்கை நீதி. அந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சிகள் தற்போது நடக்கிறதோ என்ற சந்தேகமும் அச்சமும் சிறுபான்மை யினர் மட்டுமன்றி அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது. எனினும், பிரதமரின் சமீபகாலப் பேச்சுகளில் ஒரு தெளிவு உள் ளது. மோடியின் வெளிநாட்டு பயணங்கள் அவரது சிந்தனையில் மாற்றத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்பது போன்ற குரல்கள் தொடருகின்றதே?

இந்தியாவை இந்து நாடாக ஆக்க வேண்டுமென்ற 90 ஆண்டு கனவை நனவாக்க ஆர்எஸ்எஸ் துடிக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து மோடி வந்திருந்தாலும், தற்போது அவர் அதற்கு துணை போவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பின் அவர் நிறைய படிப்பினைகளை பெற்றுள்ளார். இதனால் பாஜக-வுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்குமே மோதல் வரலாம்.

இஸ்லாமியர் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் இஸ்லாமியர் அல்லா தவர்களிடம் இருக்கும் ஒற்றுமை இஸ்லாமிய இயக்கங்களிடையே இல்லாதது ஏன்?

தமிழகத்தில் மொத்தம் 210 இஸ் லாமிய இயக்கங்கள் உள்ளன. தொழுகை என்றும், ஜகாத் வசூலிக் கிறோம் என்றும் சேவைக்கென புறப்படுபவர்களுக்கும் அரசியல் ஆசை வந்துவிடுகிறது. ஆளா ளுக்கு தலைவராக நினைத்து தேர்தல் நேரங்களில், ஏதாவது ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பதாக அறிக்கைவிடுகிறார்கள். ஒற்றுமை யின்மைக்கு அதுதான் காரணம்.

தேர்தல் நேரத்தில் மட்டுமே அறியப்படும் கட்சியாக உள்ள ஐயுஎம்எல்-ஐ போராட்டக் களத்தில் காண முடியவில்லையே?

டென்மார்க் நாட்டில் நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை ஒன்று கிளம்பியபோது, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை சில இஸ்லாமிய இயக்கங்கள் நடத்தின. நாங்கள் அதில் பங்கேற்கவில்லை. மாறாக, அமெரிக்க துணைத் தூதரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை மனுவாக அளித் தோம். தமிழக சாலையில் நின்று கொண்டு அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுப்பதால் என்ன பயன் வரப்போகிறது. தேவையான வற்றுக்கே போராடுவோம்.

கேரளத்தில் 20 எம்எல்ஏ-க்களை கொண்டுள்ள ஐயுஎம்எல், தலைமை யிடமான தமிழகத்தில் வேலூரைத் தாண்டி சாதிக்க முடியாதது ஏன்?

கேரளத்தில் கிட்டத்தட்ட 26 தொகுதிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அதனால் அங்கு ஐயுஎம்எல் வலிமையாக உள்ளது. கேரளம் அளவுக்கு தமிழகத்திலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இருந்தாலும், குறிப்பிட்ட தொகுதி களில் என்று இல்லாமல் பரவலாக வசித்து வருகிறார்கள். இதனால் நிறைய இடங்களில் சாதிக்க முடியவில்லை.

திமுகவின் துணை அமைப்பு போல் தொடர்ந்து அந்தக் கூட்டணியில் நீடிக்கிறீர்களே என்ன காரணம்?

எங்களுடைய சோதனைக் காலங்களில் திராவிட இயக்கம்தான் ஆதரவுக் கரம் நீட்டியது. சீர்திருத்த கருத்துகளால் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இப்போது இருக்கும் கட்சிகளில், திராவிட பாரம்பரியத்தை பின்பற்றுவது திமுக மட்டும்தான் என்று நம்பு கிறோம். திமுகவும் அவ்வாறே நடந்து வருகிறது. எங்களது நம்பிக்கை பறிபோனால் விலகிவிடு வோம்.

திமுக பலவீனமடைந்து வருகிறது என்று சொல்லப்படும் சூழலில், கூட்டணியில் தொடர விரும்புகிறீர் களா?

திமுக பலவீனமாகிவிட்டது என்பது உருவாக்கப்பட்ட கருத்து. திமுக இப்போது வளர்ந்துள்ளது. இதை நான் ஆசைக்காக கூற வில்லை. மக்களவை தேர்தலில் சில குழப்பங்கள் இருந்தன. அது சரி செய்யப்பட்டுவிட்டது.

தேமுதிக ஒரு அரசியல் கட்சியாக எப்படி செயல்படுகிறது?

‘ராமர் கோயில்’, ‘இந்து ராஜ் ஜியம்’ என நாங்கள் எதிர்க்கும் கொள்கைகள் பாஜகவிடம் கூட உள்ளன. ஆனால் தேமுதிகவிடம் என்ன இருக்கிறது. தலைவர்களின் கவர்ச்சியைக் கண்டு ஒரு சாரார் கட்சிகளில் இணைகிறார்கள். நாங்கள் அவற்றை ஏற்கவில்லை.

திமுகவை போல் உங்கள் கட்சி அமைப்பிலும் 52 மாவட்டங்களை உருவாக்கியுள்ளீர்கள், ஏதேனும் புதிய திட்டம் உள்ளதா?

கட்சி நடவடிக்கைகளை பரவலாக்க வேண்டும் என்பதும் இதன் நோக்கம். திமுகவை 65 மாவட்டங்களாக பிரித்துள்ளனர். திமுக மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து செயல்பட வசதியாக இருக்கும் என்றும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x