Published : 18 Jun 2015 03:46 PM
Last Updated : 18 Jun 2015 03:46 PM

இடஒதுக்கீடு சேர்க்கையில் முறையான விசாரணை இல்லை: அரசுக்கு பெற்றோர் புகார் கடிதம்

தனியார் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம், அதிகாரிகள் குழு முறையாக விசாரணை நடத்துவதில்லை என, பெற்றோர் தரப்பில் அரசுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்திய பள்ளிகளுக்கு அரசு ரூ.97.05 கோடி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளில் இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களிடம் தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஏதேனும் கட்டணம் வசூலித்தனவா என்ற கோணத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி தொடங்கிய இந்த விசாரணை இன்று முடிவடைகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழு, பெற்றோர்களிடம் முறையான விசாரணையை நடத்தவில்லை என பெற்றோர்கள் மத்தியில் புகார் எழுந்தது. இது குறித்து ‘தி இந்து’ நாளிதழில் ஏற்கெனவே செய்தி வெளியானது. இந்நிலையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த சையதுயூசுப் என்பவர், தமிழக அரசு செயலர், பள்ளிக் கல்வித்துறைச் செயலர், இயக்குநர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ‘பொள்ளாச்சியில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் என் மகனைச் சேர்த்தேன். 2014 -15, 2015- 16 கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து ரூ.7500 கட்டியுள்ளேன். 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கப் பட்டாலும், அரசு நிதி அளித்தால் திருப்பித் தரப்படுமெனக் கூறி கட்டணம் வசூலித்தனர்.

கடந்த 15-ம் தேதி அதிகாரிகள் குழு பள்ளிக்கு வருவதாகவும், பெற்றோர்களிடம் நேரடியாக விசாரிப்பதாகவும் தகவல் கூறினர். ஆனால் அவர்கள் பெற்றோர்களைச் சந்திக்கவில்லை. குழுவினரிடம், நாங்கள் செலுத்திய தொகை திரும்பக் கிடைக்குமா எனக் கேட்டபோது, ‘உங்களுக்குரிய ஆவணத்தை பள்ளி நிர்வாகத்திடம் வாங்கிவிட்டோம், அவர்களிடம் கேட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.

இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அனைவரிடமும் நேரடியாக விசாரணை நடத்தி, அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவே, இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஆனால் தனியார் பள்ளி நிர்வாகம் தரும் ஆவணங்களை மட்டும் பெற்றுச் சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களிடம் வசூலித்த பணத்தை திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x