Published : 13 Jun 2015 12:21 PM
Last Updated : 13 Jun 2015 12:21 PM

தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதில் தெலங்கானாவிடம் தமிழகம் பாடம் கற்க வேண்டும்: ராமதாஸ்

தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதில் தெலங்கானாவிடம் தமிழகம் பாடம் கற்க வேண்டும் என்ற நிலை இப்போது காணப்படுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவின் 29-ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்டுள்ள தெலங்கானா அதன் புதிய தொழில் கொள்கையை ஹைதராபாத்தில் வெளியிட்டுள்ளது. தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான அனுமதி விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய தொழிற்சாலைகளுக்கு அனுமதி பெறும் உரிமை (Right to Clearance) உட்பட பல முற்போக்கு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இது வரவேற்கத்தக்கதாகும்.

ஒரு மாநிலம் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் வேளாண்மை, உற்பத்தி, சேவை ஆகிய 3 துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். தொழிற்துறையில் முன்னேற வேண்டுமானால் தொழில்துறை முதலீட்டுக்கு ஏற்ற சூழல் நிலவ வேண்டியது அவசியமாகும். அதைக் கருத்தில் கொண்டு தான் தொழிற்சாலைகளுக்கு அனுமதி பெறும் உரிமை என்ற புதிய சித்தாந்தத்துடன் கூடிய தொழில் கொள்கையை தெலங்கானா அரசு வெளியிட்டிருக்கிறது.

இதன்படி, தொழிற்சாலைக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மீது குறித்த காலத்தில் அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும். முடிவெடுப்பதில் தாமதம் செய்யப்பட்டால், அதற்குக் காரணமான அதிகாரிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் தண்டம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த வசதியாக தெலங்கானா மாநில தொழில் திட்டங்கள் அனுமதி மற்றும் சுய சான்றளிப்பு சட்டம்--2014 என்ற புதிய சட்டத்தையும் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலங்கானா அரசு நிறைவேற்றியுள்ளது.

இவை தவிர, தொழில் திட்டங்களுக்கு ஒற்றைச்சாளர அனுமதி, குறைந்தபட்ச ஆய்வு, அதிகபட்ச சேவை ஆகிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் மேலாக புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும் போது, வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை தவிர்க்க ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலங்களைக் கொண்ட நிலவங்கி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்துமே பாமகவால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் யோசனைகள் தான். பாமக வெளியிட்ட நிழல் நிதி நிலை அறிக்கைகளிலும் இவை குறித்து விளக்கப்பட்டிருக்கின்றன. தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்தத் திட்டங்களை செயல்படுத்த தெலங்கானா முன்வந்திருப்பது பாராட்டத்தக்கதாகும். இந்த புதிய திட்டங்கள் தொழில்துறையினரிடம் மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ள நிலையில், இந்தத் திட்டங்களை தெலங்கானா அரசு முழுமையாக செயல்படுத்த முன்வர வேண்டும்.

தொழில்துறை வளர்ச்சிக்காக தெலங்கானா அதிரடியான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தின் நிலைமை கவலையளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க முன்வருபவர்கள் முதல்வரை சந்திப்பதே அரிதானதாக உள்ளது. அமைச்சர்களை சந்தித்தால், எவ்வளவு முதலீடு செய்வீர்கள் என்பதற்கு பதிலாக எங்களுக்கு எவ்வளவு தருவீர்கள்? என கேட்கும் அவல நிலை தான் தமிழகத்தில் காணப்படுகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையே ஜெயலலிதா என்ற தனி மனிதருக்காக பல முறை ஒத்திவைக்கும் நிலையில் தான் தமிழக அரசு செயல்படுகிறது. தமிழக அமைச்சர்களைப் பொறுத்தவரை தொழில்துறையினரின் நலன் முக்கியமல்ல; முதலமைச்சரின் மகிழ்ச்சி தான் மிகவும் முக்கியம். இந்த அணுகுமுறை காரணமாக தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் வராதது ஒரு புறமிருக்க, ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகளும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட தமிழகத்தில் திறமையான, கடுமையாக உழைக்கக்கூடிய மனித வளம் உள்ளது. துறைமுகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் ஒப்பீட்டளவில் நன்றாகவே உள்ளன. ஆனாலும், ஆட்சியாளர்களின் சுயநலம் மற்றும் ஊழல் போதை காரணமாக தொழில்துறை முதலீடுகள் தமிழகத்தின் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மறுக்கின்றன.

தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதில் தெலங்கானாவிடம் தமிழகம் பாடம் கற்க வேண்டும் என்ற நிலை தான் இப்போது காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் பாமக ஆட்சிக்கு வந்த பின்னர் தெலங்கானா மாநிலமே வியக்கும் அளவுக்கு புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டு தொழில் வளர்ச்சி பெருக்கப்படுவது உறுதி'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x