Published : 09 Jun 2015 04:40 PM
Last Updated : 09 Jun 2015 04:40 PM

பாம்பன் பாலம், ராமேசுவரம் கோயிலுக்கு விரைவில் சூரிய மின் சக்தி: கலாமின் ஆலோசகர் தகவல்

பாம்பன் பாலத்திற்கும், ராமேசுவரம் கோயிலுக்கும் விரைவில் சூரிய ஒளியில் இருந்து மின்சக்தி என முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து அப்துல் கலாம் ஓய்வுப் பெற்றப் பின்னர் தான் பிறந்த மண்ணாகிய ராமேசுவரம் தீவிற்காக ராமேசுவரம் சோலார் மிஷன் திட்டத்தை உருவாக்கினார்.

இத்திட்டத்தின் மூலம் ராமேசுவரம் தீவிற்குத் தேவையான முழுமையான மின்சாரத்தை சூரிய சக்தியில் இருந்து பெறவது ஆகும். இதற்காக ராமேசுவரத்தில் உள்ள அவரது வீடான ‘ஹவுஸ் ஆப் கலாம்’ அதில் இயங்கும் ‘மிஷன் ஆப் லைப்’ எனப்படும் அருங்காட்சியத்திற்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து பெறுவதற்கான பணியை தனது சொந்த செலவில் செய்தார்.

அதனைத் தொடர்ந்து ராமேசுவரம் தீவில் மின்சாரம் இல்லாத 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சக்தி பெறக்கூடிய உபககரணங்கள் ராமேசுவரம் சோலார் மிஷன் திட்டம் மூலம் இலவசகமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் முதன்முறையாக சூரிய சக்தியில் இயங்கும் மீனவர்களின் நாட்டுப்படகுகளும் பாம்பனில் அறிமுகம் செய்யப்பட்டன.

செவ்வாய்கிழமை சோலார் மிஷன் திட்டம் மூலமாக சூரிய சக்தியினால் இயங்கும் மின்சார உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ராமேசுவரத்திலுள்ள அப்துல் கலாமின் பூர்விக வீடான ஹவுஸ் ஆஃப் கலாமில் நடைபெற்றது.

இதில் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர் சோலார் உபகரணங்களை 25 மீனவக் குடும்பங்களுக்கு வழங்கினார். கலாமின் அண்ணன் மகள் நசிமா மரைக்காயர், பேரன் சலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராமேசுவரம் தீவு முழுவதும் சூரிய மின் சக்தியின் மூலம் இயங்க வேண்டும் என்பதே நமது முன்னால் குடியயரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவாகும். அவரது வழிகாட்டுதலின்படி ராமேசுவரம் சோலார் மிஷன் திட்டம் உருவாக்கப்பட்டு நடப்பாண்டில் (2015-2016) ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ராமேசுவரம் தீவில் உள்ள 22 அரசுப் பள்ளிகளுக்கு 66 கிலோ வாட் சக்தியில் முழுமையான சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கக்கூடியதாக மாற்றப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து பாம்பன் பாலமும், ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலும் மின்சாரத்திற்கு பதிலாக சூரிய ஒளியில் இருந்து மின்சக்தியை பெறுவதற்கான பணிகள் துவங்கும்.

இதற்கு இன்டர்நேஷனல் வீ சர்வ் பவுன்டேஷன், ரோட்டரி கிளப் ஆகியன உறுதுணையாக இருக்கும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x