Published : 19 Jun 2015 08:16 PM
Last Updated : 19 Jun 2015 08:16 PM
நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 6 பண்டைய பழங்குடிகளில் ஒரு வகையினர் தோடர்கள். இயற்கையோடு ஒன்றி வாழும் இவர்களின் வாழ்க்கையில், எருமைகள் ஓர் அங்கமாகும்.
இந்த எருமைகள் உலகில் வேறு எங்கும் இல்லை என்பதும், தோடர்களுக்காக கடவுளால் படைக்கப்பட்டவை என்பதும் இவர்களின் ஐதீகம்.
தோடர் ரக எருமைகளின் கொம்புகள் 1.5 மீட்டர் வரை வளரும். இவற்றின் உடலமைப்பு மிகவும் முரட்டுத்தன்மை போன்ற தோற்றம் உடையது. எனவே, இவற்றுக்காக வட்டமான கற்கள் அடுக்கி எருமைப்பட்டி (தொளா) செய்து அதில் அடைத்து வைப்பார்கள். ஓர் எருமை 5 லிட்டருக்கும் குறைவாகவே பால் தரும். ஆனால், பால் மிகவும் அடர்த்தியாகவும், திடமாகவும் இருக்கும். தோடரின மக்கள் சுத்த சைவர்கள். இவர்களின் பாரம்பரிய உணவான பால்சாதம், நெய் சாதம், ஓட்வியதோர் எனப்படும் உருண்டை சாதம் பாலை சார்ந்தே உள்ளது. ஒவ்வொரு தோடரின மக்களின் வீட்டிலும் எருமை குடும்ப உறுப்பினர்போல பாவிக்கப்படுகிறது.
எருமையை, எமனின் வாகனமாக கருதப்படும் நிலையில், தோடர்கள் அவற்றை இறைவனுக்கு சமமாக கருதுகின்றனர். அனைத்து கோயில்களிலும் எருமையின் கொம்பு அல்லது எருமையின் தலை வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
கோயில் திறந்திருக்கும் நேரங்களில் பூசாரி மட்டுமே, கோயில் எருமைகளிலிருந்து பாலைக் கறந்து, பூஜை செய்வார். கோயில் திறக்கப்படாத நேரங்களில் இந்த எருமைகளிடமிருந்து பால் கறக்கப்பட மாட்டாது.
உப்பு சாஸ்திர விழா
இந்த மக்களின் மிகவும் முக்கியமான ‘உப்பொட்டித்’ எனப்படும் உப்பு சாஸ்திர விழா ஆண்டுக்கு இரு முறை கொண்டாடப்படுகிறது. காட்டில் இரு சிறிய குழி வெட்டி, அதில் பூசாரி தண்ணீர் ஊற்றி உப்பினை போட்டு, எருமைகள் பெருகவும், தங்களுக்காக எப்போதும் உழைக்கவும், அவற்றின் நலனுக்காக இயற்கையை வணங்கி அந்த நீரை எருமைகளை பருகச் செய்வார். இதனால் எருமைகள் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.
சடங்குகளில் பங்கு
பெண் கருத்தரித்த 5 முதல் 7-வது மாதத்தில் ‘வில் அம்பு சாஸ்திரம்’ நடைபெறும். இரு நாட்கள் நடக்கும் இந்த நிகழ்வில் பெண்ணுக்கு எருமைப்பாலை குடிக்கக் கொடுப்பார்கள். குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு பரிசாக எருமைகள் வழங்குவார்கள்.
தோடர் இனத்தில் ஒவ்வொருக்கும் எருமைகளே பரிசாக கொடுப்பது வழக்கம். அதே போன்று, யாரேனும் தவறு செய்தால் அபராதமாக எருமையைத்தான் கொடுக்க வேண்டும். எருமையை இழந்தால் பேரிழப்பாக தோடரின மக்கள் கருதுவதால், இந்த தண்டனையால் தவறுகள் குறையும் என்பது நம்பிக்கை.
12 எருமை இனம்
இந்தியாவில் உள்ள 12 எருமை இனங்களில் தோடர் எருமை தனித்தன்மை வாய்ந்து அதிகமான பகுதியிலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 மீட்டர் உயரத்தில் மட்டுமே இந்த இனம் உள்ளது.
17-வது நூற்றாண்டுக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கில் இருந்த எருமைகள், 1994-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 3531 எருமைகள் மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து தற்போது 1500-க்கும் குறைவான எருமைகளே உள்ளன என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தோடரின தலைவர் மந்தேஸ் குட்டன் கூறும்போது, ‘ஒரு குடும்பத்துக்கு 100-க்கும் மேலிருந்த எருமைகள் தற்போது குறைந்து விட்டன. எருமைகளை வனங்களில் மேய்ச்சலுக்கு விடும்போது புலி, சிறுத்தைகள் தாக்கி அவை இறந்துள்ளன. சீகை, கற்பூரம் மற்றும் பைன் மரங்கள் புல்வெளிகளை ஆக்கிரமித்ததால், மேய்ச்சல் நிலங்கள் குறைந்து பசுந்தீவனம் கிடைக்காமல் உடல் நலன் குன்றி சில இறக்கின்றன’ என்றார்.
‘கன்று இறப்பை தடுக்க நடவடிக்கை’
இந்த இன எருமைகளை பாதுகாப்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் தங்கவேலு கூறும்போது, ‘தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் வம்சாவளி முறையில் 2011-12-ல் தோடர் ரக எருமை இனங்களிலிருந்து விந்து சேகரிக்கப்பட்டு, பால் உற்பத்தி பெருக்கும் தன்மை அறியப்பட்டது. தோடர் ரக எருமை இனத்தில் கன்று இறப்பை தடுக்கும் விதத்தில் கன்றுகளுக்கு குடற்புழு நீக்கவும், தீவன உற்பத்தியை பெருக்கி, இந்த இனத்துக்கு உலர் தீவன உற்பத்தியும், பசுந்தீவன உற்பத்தியும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தோடர் எருமைகள் பாதுகாப்புத் திட்டம் ஏற்படுத்தி தோடரின நாட்டின எருமைகளின் தரத்தையும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பசுந்தீவனம், அடர் தீவனம் மற்றும் தாது உப்புகள் வழங்கி மலட்டுத் தன்மை நீக்கப்படுகிறது. எருமைகளை பராமரிப்பது குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது’ என்றார்.
இந்த இனத்தை பாதுகாக்கும் வகையில் உதகை சாண்டிநல்லாவில் உள்ள ஆடு வளர்ப்பு மையத்தில் இந்த எருமைகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆய்வு மைய மருத்துவர்கள் மரபணுக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT