Published : 09 Jun 2015 07:55 AM
Last Updated : 09 Jun 2015 07:55 AM

வாலாஜாபாத் பேரூராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் பாலாறு பாழாகும் அவலம்: நிலத்தடி நீர் மாசடைவதாக விவசாயிகள் வேதனை

வாலாஜாபாத் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும், பாலாற்றில் விடப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதி 15 வார்டு களுடன் தேர்வு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்கு, 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், பல்வேறு பணிகளுக்காக தினமும் பேரூராட்சி பகுதிக்கு 5 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இங்குள்ள குடியிருப்பு மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்ல பேரூராட்சி நிர்வாகம் கால்வாய்கள் ஏதும் அமைக்காததால், கழிவுநீர் திறந்த வெளியில் வெளியேற்றப்படும் நிலை உள்ளது.

இதனால், பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும், திறந்த வெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் நகரை ஒட்டியுள்ள பாலாற்றில் விடப்படுவதால், அங்கு கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால், பாலாற்றின் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சி மாவட்டச் செயலாளர் நேரு கூறியதாவது: கழிவுநீரை வெளியேற்ற அடிப்படை வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. நகரின் பல பகுதியில் சாலையில் கழிவுநீர் தேங்கி நின்று, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், கழிவுநீரை பாலாற்றில் விடுவதால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. அதனால், வாலாஜாபாத் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

ஆலந்தூர், தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக, இப்பகுதியில் உள்ள பாலாற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்துள்ளனர். ஆழ்துளை கிணறுகள் உள்ள பகுதியில் சில அடி தூரத்தில் பேரூராட்சி நிர்வாகம் வெளியேற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், குடிநீர் மாசடையும் நிலையும் உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி பேரூராட்சிக்கு சொந்தமான நிலப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, அங்கு கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் கூறியதாவது: கழிவுநீரை வெளியேற்ற வேறு ஏதேனும் வழி உள்ளதா என அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளில் சிறிதளவு இடம் விட்டு, அங்கு மரக்கன்றுகள் நட்டு வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அவற்றுக்கு பாய்ச்சலாம். இதன் மூலம், தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதை தடுக்க முடியும். பாலாற்றில் கழிவுநீர் கலப்பதாக கூறப்படும் பகுதியை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x