Published : 28 Jun 2015 03:06 PM
Last Updated : 28 Jun 2015 03:06 PM
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது பொன்னிவாடி கிராமம். இங்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆடு, மாடு, கோழி மற்றும் தானியங்கள் உள்ளிட்டவை தீவட்டிக் கொள்ளையர்களால் அதிக அளவில் திருடப்பட்டன. இதையடுத்து, ஊர் பெரியவர்கள் காவல் பணியில் ஈடுபட்டனர்.
பொன்னிவாடியை தலைமையிடமாகக் கொண்டு 'பொது பண்டு' (நிதி அமைப்பு) ஏற்படுத்தப்பட்டு, அவை 'கொத்துக்காரர்' அல்லது 'ஊர்பண்ணாடி' வசம் விடப்பட்டது. திருட்டைத் தடுப்பதே இதன் நோக்கம். சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, வீட்டுக்கு ஒருவர் காவல் பணிக்கு வர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டது.
இரவு நேரங்களில் திருட்டு நடைபெற்ற கிராமத்தினர் விசில் அடித்தும், 'கொம்பு' (இசைக்கருவி) ஊதியும் தகவல் தெரிவிப்பர். திருடிய குற்றத்துக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், இனிமேல் திருடமாட்டேன் என மேழியின் (ஏர் உழவு) மீது சத்தியம் செய்ய வேண்டும்.
பொன்னிவாடியை தலைமையிடமாகக் கொண்ட கோனேரி பட்டி, எரக்காம்பட்டி உட்பட 32 கிராமங்கள் 'பண்டு' கிராமங்களாக இருந்தன. தற்போது, அவை கிராம ஊராட்சிகளாக மாறியுள்ளன. இருப்பினும், 22 கிராமங்களில் 'பண்டு' செயல்பாடு உள்ளது. ஆனால், யாரிடமும் நிதி வசூலிப்பதில்லை.
மக்களிடமுள்ள ஒற்றுமையால் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், போலீஸாரின் கண்காணிப்பு அதிகம் இருப்பதால், திருடர்களின் செயல்பாடுகள் குறைந்துள்ளதாகவும் இக்கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும், திருட்டு சம்பவம் என்றால் அனைவரும் கூடுவது தற்போதும் வழக்கமாக உள்ளது.
இதுகுறித்து கோனேரிபட்டியைச் சேர்ந்த 'கொத்துக்காரர்' குமாரசாமி (78), சிவசாமி (75) ஆகியோர் கூறும்போது, "நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில், எங்கள் முன்னோர்கள் இந்த அமைப்பைத் தொடங்கினர். திருட்டை தடுப்பது மட்டுமே அதன் நோக்கம். 32 கிராமங்களின் ஒற்றுமையை பார்த்து திருடர்கள் பயந்தனர். இதனால், காலப்போக்கில் படிப்படியாக திருட்டு குறைந்தது.
சமீபத்தில், லாரி மூலமாக ஆடுகளை திருட வந்த கும்பலை பிடித்து போலீஸில் ஒப்படைத்தோம். புதிதாக யார் வந்தாலும் கிராம மக்கள் விசாரிப்பர். முன்னுக்குப் பின் முரணாகப் பதில் வந்தாலே உஷாராகிவிடுவர். உடனடியாக விசில் அல்லது செல்போன் மூலமாக அனைவருக்கும் தகவல் தெரிவித்து கூடிவிடுவோம்" என்றனர்.
வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் கள ஒருங்கிணைப்பாளர்கள் தூரன் சு.வேலுச்சாமி, க.பொன்னுசாமி ஆகியோர் கூறும்போது, "நாட்டுப்புறக் கலை மற்றும் கிராம மக்களின் பழக்க, வழக்கங்களை ஆய்வு செய்யும்போது, பொன்னிவாடி கிராமத்தில் 300 ஆண்டுகளாக திருட்டைத் தடுக்க, கிராம மக்களின் நூதன அமைப்பு இருந்ததை கண்டறிந்தோம்.
இந்த அமைப்பு தோன்றிய காலத்தில், சாதிய ஒடுக்குமுறைகளால் பல்வேறு கிராமங்களில் கட்டுப்பாடுகள் இருந்துள்ளன. ஆனால், இந்தக் கிராமத்தில் மட்டுமே திருட்டை தடுக்க நிதி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான வரலாற்று ஆய்வு நூலை உருவாக்கியுள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT