Published : 28 May 2014 12:09 PM
Last Updated : 28 May 2014 12:09 PM
ஓய்வு பெற்ற அரசு உயர் ஆதிகாரிகள் அரசியலில் நுழைய தடை விதிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மத்திய, மாநில அரசு உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் சேர்வது அண்மைக்காலமாக புதிய வழக்கமாகி வருகிறது.
படித்தவர்களும், மக்கள் நலன் சார்ந்த துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்களும் அரசியலில் நுழைந்து மக்கள் பணியாற்றுவது ஆரோக்கியமான விஷயம் தான் என்றாலும், தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள் அரசுப் பணியை அரசியல் பணியாக்குவது தான் மிகுந்த கவலையளிக்கிறது.
பணி ஓய்வு பெற்ற பின் ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்து பதவிகளைப் பெறத் துடிக்கும் உயரதிகாரிகள் தங்களது பணிக்காலத்தில் நடுநிலை தவறி, தாங்கள் சேரவிருக்கும் கட்சித் தலைமைக்கு சாதகமாக செயல்படத் தொடங்குகின்றனர்.
ஜனநாயகத்தின் தூணாக இருந்து அரசின் ஊழியராக செயல்பட வேண்டிய அதிகாரிகள், மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு, மறைமுகமாக ஒரு குறிப்பிட்ட கட்சியின் பணியாளராக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளாக பணியாற்றுபவர்கள் ஓய்வு பெற்ற பின் தீர்ப்பாயங்களின் தலைவர்களாகவும், பல்வேறு ஆணையங்களின் தலைவர்களாகவும் நியமிக்கப் படுவது வழக்கம்.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முதல் சட்ட ஆணையம் சமர்ப்பித்த பதினான்காவது அறிக்கையில்,"உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு சார்பின்றி சுதந்திரமாக பணியாற்றுவதை உறுதிசெய்ய வேண்டுமானால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு வேறு எந்த பதவியிலும் நியமிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என பரிந்துரைத்திருந்தது.
நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்களே ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் கவுரவ பதவிக்காக நடுநிலை தவறக் கூடும் என சட்ட ஆணையம் கருதும் போது, அரசியலில் சேர்ந்தால் கிடைக்கும் பதவிக்காக ஏங்கும் அதிகாரிகள் நடுநிலை தவறாமல் செயல்படுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.
ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் எந்த தூண் கடமை தவறினாலும், அது ஜனநாயகம் என்ற கோட்டையை சிதைத்து விடும். இது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு நன்மை பயக்காது.
எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகள் தங்களது பணிக்காலத்தில் ஆளுங்கட்சிக்கோ அல்லது தாங்கள் விரும்பும் கட்சிக்கோ சாதகமாக செயல்படாமல் நடுநிலையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டுமானால், அவர்கள் பணி ஓய்வுக்குப் பிறகு அரசியல் கட்சிகளில் சேர்ந்து பணியாற்ற தடை விதிக்க வேண்டும்.
இதுதொடர்பாக பொது விவாதம் நடத்தி தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசும், சட்ட வல்லுனர்களும் முன்வர வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT