Published : 29 Jun 2015 07:07 AM
Last Updated : 29 Jun 2015 07:07 AM

பெண்ணிடம் தவறாக நடந்த எஸ்.ஐ.க்கு அடி, உதை: கோடம்பாக்கத்தில் இரவில் மறியல்

கோடம்பாக்கத்தில் பெண்ணிடம் தவறாக நடந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளரை பொதுமக்கள் அடித்து உதைத்து, மறியலிலும் ஈடுபட்டனர்.

சென்னை பெரம்பூர் அருகே தாசாமகான் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு 8.30 மணி அளவில் வீடு திரும்புவதற்காக கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் நடந்து வந்தார். கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சாலையை கடப்பதற்காக நின்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், சாலையை கடக்க உதவுவது போல் மும்தாஜிடம் தவறான முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மும்தாஜ் பன்னீர்செல்வத்தை கண்டித்துள்ளார். ஆனால் அவர் மும்தாஜை கிண்டல் செய்திருக்கிறார்.

ஆத்திரம் அடைந்த மும்தாஜ் அருகில் இருந்த பள்ளிவாசலுக்கு சென்று அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஒன்று திரண்டு வந்து போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வத்தை தாக்கினர். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.

போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடவடிக்கை

பன்னீர்செல்வம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x