Published : 24 Jun 2015 09:24 AM
Last Updated : 24 Jun 2015 09:24 AM
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக ஆட்சிக்கு வருவது என்பது ‘அத்தைக்கு மீசை முளைத்தால்’ என்பது போலத்தான் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் செ.கு.தமிழரசன் எம்எல்ஏ கூறினார்.
‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
நீண்டகாலமாக அதிமுக கூட்டணியில் நீடிப்பதன் மூலம் என்ன பலனை அடைய முடிந்தது?
ஒடுக்கப்பட்ட மக்களின் சாதாரண தேவைகளைக்கூட பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்தவர் எம்ஜிஆர். அதே அணுகுமுறையுடன் புதிய திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.
இந்திய குடியரசு கட்சியின் தந்தை சிவராஜ், இரட்டைமலை சீனிவாசன், வீரமங்கை குயிலி என பலருக்கு மணிமண்டபம் கட்டியது அதிமுக அரசுதான்.
மணிமண்டபங்களை கட்டுவதன் மூலமே ஒரு சமூகம் எழுச்சி பெற்றுவிடுமா?
இன்றைக்கு அதிமுக அரசு வழங்கும் 20 கிலோ அரிசி, விலையில்லா மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் போன்றவற்றின் மூலம் 80 சதவீதம் பயனடைவது ஒடுக்கப்பட்ட மக்கள்தான்.
தலித் மாணவர்களின் உயர் கல்விக்காக அதிமுக அரசு ரூ.80 கோடி ஒதுக்கியதன் மூலம், கடந்தாண்டு 45 ஆயிரம் மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்ந்தனர். இவை தலித் சமூக எழுச்சிக்கான பணிகள்தானே.
ஒடுக்கப்பட்டோர் அதிகாரத்துக்கு வருவதற்கு கூட்டணி ஆட்சி தேவை என்பதை ஏற்கிறீர்களா?
முதலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பங்கு வேண்டுமா அல்லது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல்படுவதாக கூறும் இயக்கங்களுக்கு பங்கு வேண்டுமா என்பதை ஆராய வேண்டும். ஆட்சி அதிகாரத்தை கேட்டுப் பெறுவதைவிட, வலுவான வாக்கு வங்கியை உருவாக்கினால் அதுவே தேடி வரும். எனவே, முதலில் அதைச் செய்ய வேண்டும்.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை என்பது உண்மையா?
ஜெயலலிதாதான் என்னை 2 முறை தற்காலிக பேரவைத் தலைவராக ஆக்கினார். கூட்டணிகளுக்கான அங்கீகாரத்தையும் ஒத்துழைப்பையும் வழங்குவதில் அதிமுகவுக்கு நிகராக வேறு எந்தக் கட்சியையும் சொல்ல முடியாது.
சட்டப்பேரவை தேர்தலுக்காக வலுவான கூட்டணியை உருவாக்கினால் திமுக வெற்றி பெறுமா?
‘அத்தைக்கு மீசை முளைத்தால்’ என்பது போலத்தான் அது. திமுகவினர் திருமணத்துக்கு அழைத்தாலே பல கட்சிகள் போவதில்லை. கூட்டணிக்கு மட்டும் அவர்கள் போய் விடுவார்களா என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT