Published : 15 Jun 2015 08:35 AM
Last Updated : 15 Jun 2015 08:35 AM

ஆர்.கே.நகர் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஆர்.கே.நகர் தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடி களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் படுகின்றன.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறு கிறது. இதில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தவிர சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட மேலும் 26 பேரும் களத்தில் உள்ளனர்.

இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக சுமார் 1000 துணை ராணுவ வீரர்கள் 23-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகின்றனர். வாகன சோதனை, வாக்குகள் எண்ணப்படும் இடம், பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆகிய இடங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தமிழக போலீஸார் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்.

தேர்தல் பிரிவு

தேர்தல் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு ஒன்று உள்ளது. கூடுதல் துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இது செயல்படுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து இதுவரை இந்த பிரிவில் எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 230 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் பதற்றமான வாக்குச் சாவடிகளை கணக்கெடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

கொடி அணிவகுப்பு

அந்த பகுதிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர போலீஸார் இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொடி அணி வகுப்பு ஊர்வலத்தை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x