Published : 14 May 2014 01:34 PM
Last Updated : 14 May 2014 01:34 PM
லட்சக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் விண்ணைப் பிளக்க பச்சை பட்டு உடுத்தி புதன் கிழமை காலை மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
மதுரை அழகர்கோவில் சித்திரைத் திருவிழா மே10-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை காலையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
வைகை ஆற்றில் இறங்கு வதற்காக திங்கள்கிழமை மாலை அழகர்கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோயில் முன் உள்ள கொண்டப்பநாயக்கர் மகாலில் எழுந்தருளி பல்வேறு பூஜைகளுக்கு பின் தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்தார்.
பக்தர்களின் வரவேற்பைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய கள்ளழகர் புதூர் மாரியம்மன் கோயில், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில், அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயில், அம்பலகாரர் மண்டபம் ஆகிய பகுதிகளில் எழுந்தருளி இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்தார். அங்கு பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது.
புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அப்போது கோயில் முன்பு கூடியிருந்த பக்தர்கள் பச்சை பட்டுடுத்தி குதிரை வாகனத்தில் வந்த கள்ளழகரைக் கண்டு பக்திப் பரவசமடைந்தனர். பின்னர் அங்கிருந்த புறப்பட்ட கள்ளழகர் தல்லாகுளத்திலிருந்து வைகை ஆறு வரை கூடியிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத் தொடர்ந்து தங்கக் குதிரை வாகனத்தில் புதன்கிழமை காலை 6 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கிய அவரை வீரராகவப் பெருமாள் வரவேற்றார். அழகரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசமுடன் ‘கோவிந்தா கோவிந்தா’ என விண்ணதிர கோஷ மிட்டனர். ஏராளமானோர் முடிக் காணிக்கை மற்றும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
பின்னர் வைகை ஆற்றிலிருந்து புறப்பட்ட அழகர் வழிநெடுகிலும் அமைந் துள்ள மண்டகப்படிகளில் எழுந்தரு ளினார். இதைத் தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சி நடை பெற்றது. பின்னர் இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் திருக் கோயிலுக்கு எழுந்தருளினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT