Last Updated : 25 May, 2015 11:03 AM

 

Published : 25 May 2015 11:03 AM
Last Updated : 25 May 2015 11:03 AM

திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற பணி நிறைவு: இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்

திருவள்ளூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமானப் பணி முடிவுக்கு வந்தது. இம்மாத இறுதிக்குள் நீதிமன்ற வளாகம் திறப்பு விழா காண வாய்ப்பிருப்பதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட முதன்மை நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றம், நுகர்வோர் குறை தீர்வு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் ஆகியவை ஆவடி சாலை, ஜெ.என்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ளன. இவை, வெவ்வேறு இடங்களில் இயங்குவதால் பொதுமக்களும் வழக்கறிஞர்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இதனால், மாவட்ட தலைநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க அரசு முடிவு எடுத்தது.

அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப் பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி கூறியதாவது:

18 ஏக்கர் பரப்பளவில், ரூ.12 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்பு அமைக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. தரை தளம், முதல் மற்றும் 2-ம் தளம் என 3 தளங்களுடன் 80,910 சதுர அடி பரப்பளவில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 3,600 சதுர அடி மற்றும் 2,200 சதுர அடி பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த நீதிபதிகளின் குடியிருப்புகள் அமைக்கும் பணியும் முடிவுக்கு வந்துவிட்டன.

நீதிமன்ற வளாகத்தையும், சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையையும் இணைக்கும் இணைப்புச் சாலை பணி தற்போது நடை பெற்று வருகிறது. அந்த பணி சில நாட்களில் நிறைவு பெறும். இந்த பணி முடிந்தவுடன், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்புகளை நீதித் துறையிடம் ஒப்படைத்துவிடுவோம்.இம்மாத இறுதிக்குள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழா காண வாய்ப்பிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x