Published : 25 May 2014 09:26 AM
Last Updated : 25 May 2014 09:26 AM
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் தேமுதிக, பாமக கட்சிகள் பங்கேற்கின்றன. மதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
நாட்டின் புதிய பிரதமராக பாஜகவின் நரேந்திர மோடி, திங்கள்கிழமை (நாளை) மாலை பதவியேற்கிறார். இதற்கான விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கிறது.
இதில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அனைத்து மாநில முதல்வர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அழைப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு முதல்முறையாக சார்க் அமைப்பில் உள்ள பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் பூடான் அரசருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக கட்சிகள் கண்டனம்
இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மட்டுமின்றி, பாஜக கூட்டணிக் கட்சிகளான மதிமுக, பாமகவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதையடுத்து, நாளை நடக்கும் மோடி பதவியேற்பு விழாவில் பாஜக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், விழாவில் பங்கேற்க பாமகவும் தேமுதிகவும் முடிவு செய்துள்ளன. பாமக தரப்பில் ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். மதிமுக மட்டும் விழாவை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தாலும் அவர் விழாவுக்கு செல்ல மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேநேரத்தில் மோடி பதவியேற்பில் பங்கேற்பதா, இல்லையா என்பது குறித்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சனிக்கிழமை மாலை வரை எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லையாம். முதல்வர் செல்லாவிட்டாலும் தம்பிதுரை போன்ற மூத்த உறுப்பினர் ஒருவரை மட்டுமாவது மரியாதை நிமித்தமாக அனுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக அழைப்பை ஏற்று நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் இருவரும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT