Published : 25 May 2015 11:00 AM
Last Updated : 25 May 2015 11:00 AM

பொறியியல் படிப்பை தேர்வு செய்வதில் கட் ஆப் மதிப்பெண், கலந்தாய்வின் முக்கியத்துவம் என்ன?- கல்வியாளர் ரமேஷ் பிரபா விளக்கம்

உயர் கல்வி ஆலோசனை கருத்தரங்கம்

பொறியியல் படிப்பை தேர்வு செய்வதில் கட் ஆப் மதிப்பெண் ணும், கலந்தாய்வும் முக்கிய மானவை என்று ‘தி இந்து’ உயர்கல்வி ஆலோசனை கருத்தரங்கில் கல்வியாளர் ரமேஷ் பிரபா கூறினார்.

‘தி இந்து’ வெற்றிக்கொடி மற்றும் மாதா பொறியியல் கல்லூரி சார்பில் ‘வெற்றிப்பாதை’ என்ற உயர்கல்வி ஆலோசனை கருத்தரங்கம் சென்னையை அடுத்த குன்றத்தூர் மாதா பொறியியல் கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

கருத்தரங்கை மாதா கல்வி குழுமங் களின் தலைவர் எஸ்.பீட்டர், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன், கேலக்ஸி நிர்வாகக் கல்வி நிறுவனத் தலைவரும் கல்வியாளருமான ரமேஷ் பிரபா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை, பேராசிரியை பர்வீன் சுல்தானா, ஆவணப்பட இயக்குநர் பேராசிரியர் சாரோன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சிக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதி களைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பெற்றோரு டன் வந்திருந்தனர். இதில் ரமேஷ் பிரபா சிறப்புரையாற்றிப் பேசும்போது கூறியதாவது:

எந்த படிப்பு என்றாலும் சரி மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் இணைந்துதான் முடிவெடுக்க வேண்டும். அதேநேரத்தில் பெற்றோர், தங்கள் ஆசைகளை சொல்லலாமே தவிர, பிள்ளைகள் மீது அவற்றை ஒருபோதும் திணிக்கக்கூடாது.

பொதுவாக பொறியியல், மருத்துவம் இரண்டு படிப்புகளுக்கும் எப்போதும் மவுசு இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 580 பொறியியல் கல்லூரிகளில் இரண்டே கால் லட்சம் இடங்கள் உள்ளன. எனவே, பொறியியல் படிப்புக்கு இடம் கிடைப்பது எளிது. கட் ஆப் மதிப்பெண்ணும், கலந்தாய்வும்தான் பொறியியல் மாணவர் சேர்க்கையில் மிகவும் முக்கியமானது. நல்ல மதிப்பெண் இருந்தால் நீங்கள் கேட்கும் பாடப்பிரிவு, நீங்கள் விரும்புகின்ற கல்லூரி கிடைக்கும். மதிப்பெண் குறைய குறைய, இருக்கின்ற கல்லூரியை, இருக்கின்ற பாடப்பிரிவை நீங்கள் தேர்வுசெய்தாக வேண்டும்.

பொறியியலில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பதில்தான் மாணவர்களுக்கு பெரிய குழப்பம். வேலைவாய்ப்பை பொருத்தமட்டில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் வாய்ப்பு உள்ளது. பாடப்பிரிவைவிட எந்த கல்லூரி என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்ல கல்லூரி எங்கு கிடைத்தாலும் அங்கு குழந்தைகளை அனுப்பி படிக்கவைக்க பெற்றோர் தயாராக இருக்க வேண்டும்.

பொறியியலைத் தொடர்ந்து மருத்துவப் படிப்பில் சேரவும் கடும் போட்டி நிலவுகிறது. மருத்துவம், பல் மருத்துவம் தாண்டி சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம், நர்சிங், பிசியோதெரபி, ஆகுபேஷனல் தெரபி என மருத்துவம் சார்ந்த நிறைய படிப்புகளும் உள்ளன. நர்சிங் படித்தால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அதிகம்.

தமிழக மாணவ-மாணவிகள் ஐஐடி போன்ற நுழைவுத்தேர்வு எழுதி அகில இந்திய நிறுவனங்களில் சேர வேண்டும் என்று யோசிப்பது கிடையாது. கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தால் நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்ற முடிவதுடன் வெளிநாடுகளில் பணிபுரியவும் வாய்ப்பு உண்டு.

தொழில்கல்வி படிப்புகள் மட்டுமின்றி கலை அறிவியல் படிப்புகளிலும் வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் குடும்பத்தை மனதில் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் தேவையற்ற சிந்தனைகள் மனதில் எழாது. தனிமையை தவிர்ப்பது நல்லது. நல்ல நண்பர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும்.

இவ்வாறு ரமேஷ் பிரபா கூறினார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்று அறிமுகவுரை நிகழ்த்தினார். நிறைவாக, மாதா பொறி யியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பரதீஸ்வரன் நன்றி கூறினார். மாதா பொறியியல் கல்லூரி இயக்குநர் ஏ.பிரகாஷ் மற்றும் பேராசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

‘வெற்றிக்கொடி’ நடத்திய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x