Published : 23 May 2015 08:05 AM
Last Updated : 23 May 2015 08:05 AM

ஆகஸ்ட் 11 வரை அவகாசம் இருக்கிறது: ஜெ. வழக்கில் மேல்முறையீடு குறித்து கர்நாடக அரசு சட்டப்படி முடிவெடுக்கும் - ஜெய்ராம் ரமேஷ் தகவல்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக முடிவெடுக்க கர்நாடக அரசுக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி வரை அவகாசம் உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் மே 11-ம் தேதி தீர்ப்பளித்தது. இதுகுறித்து கருத்து தெரிவிக்கவோ, விமர்சிக்கவோ விரும்பவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய கர்நாடக அரசுக்கு 3 மாதங்கள் அதாவது ஆகஸ்ட் 11-ம் தேதி வரை அவகாசம் உள்ளது.

919 பக்கங்கள் கொண்ட மிக முக்கியமான இந்தத் தீர்ப்பில் சில தவறுகள் இருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து, அவர்களின் ஆலோ சனைகளைப் பெற்று சட்டப்படி கர்நாடக அரசு முடிவெடுக்கும்.

கடந்த ஓராண்டு கால பாஜக ஆட்சியில் நாடாளுமன்றம், நீதிமன்றம், தொண்டு நிறுவனங்கள் போன்ற ஜனநாயக அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதிகள் மாநாட்டில், நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். முக்கிய மசோதாக்கள் விவாதத்துக்கு கொண்டுவரப்படாமல் நிலைக் குழுவுக்கு அனுப்பப்படுகின்றன. அவசரச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இந்திய ஜனநாயக அமைப்புகளை மோடி சீர்குலைத்து வருகிறார்.

ஆட்சியின் மொத்த அதிகாரமும் மோடியிடமே குவிந்துள்ளது. அமைச்சர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதனால் முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக தலைமை தகவல் ஆணையர் பதவியும், 7 மாதங்களாக தலைமை ஊழல் ஒழிப்பு ஆணையர் பதவியும் காலியாக உள்ளன.

ஆபத்தான விளையாட்டு

ஒரு பக்கம் வளர்ச்சி பற்றி மோடி பேசுகிறார். மறுபக்கம் அமித் ஷா போன்ற தலைவர்கள் மதவாதத்தைத் தூண்டும் வகையில் பேசுகின்றனர். பாஜகவின் இந்த திட்டமிட்ட ஆபத்தான இரட்டை விளையாட்டால் சிறுபான்மையினர் மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

ஆட்சிக்கு வந்ததும் இது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்டிஏ) என்றார் மோடி. ஆனால், தற்போது மோடியின் ஜனநாயக மற்ற கூட்டணி அரசாக (எம்என்டிஏ) மாறியுள்ளது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

ராகுல் தமிழகம் வருகை

ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, ‘‘நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் போராட்டங்களை நடத்தியது. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் காந்தி, ஜூன் 3-வது வாரத்தில் ஆந்திரம், தமிழகத்துக்கு வரவுள்ளார்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x