Published : 17 May 2015 09:55 AM
Last Updated : 17 May 2015 09:55 AM

கொட்டும் மழையில் கொடைக்கானல் மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகளை குதூகலிக்க வைத்த குதுப்மினார், ட்ரீ ஹவுஸ்

கொடைக்கானலில் 54-வது கோடை விழா மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நேற்று தொடங்கியது. மலர் கண்காட்சிக்காக பூங்காவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே உதகை, கொல்கத்தா, பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 90 வகையான வெளிநாட்டு, உள்நாட்டு மலர் செடிகளை தோட்டக்கலைத் துறையினர் நட்டு பராமரித்தனர். அந்த செடிகளில் நேற்று நடைபெற்ற மலர் கண்காட்சியில் ஒரு கோடி மலர்கள் பூத்து குலுங்கியது, சுற்றுலாப் பயணிகளின் கண்ணுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.

இதில் வண்ண வண்ண நிறங்களில் பூத்திருந்த சுர்னமெண்டல் கேபேஜ், கார்னேசன், சாமந்தி, அல்ட்ரோ மேரியா, பிங் ஆஸ்டர், சாலிவியா, டேலியா, டெல்பீனியம், ரோஜா, பார்டர் பூஞ்ச்செடிகளான ஷிப்டன், வெர்பினியா, கோல்டன் ரடு உள்ளிட்ட 90 வகை வெளிநாட்டு, உள்நாட்டு மலர்கள் கண்காட்சி அரங்கில் ஜப்பானின் இக்கி பானா அடுக்கு முறையில் அழகாக பூந்தோட்டம் போல் அமைத்திருந்தது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது. பூங்கா நுழைவு வாசலில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மலைத் தோட்ட பயிர்களைக் கொண்டு கண்காட்சி அரங்குகள், அலங்காரத் தோரணங் கள் அமைக்கப்பட்டிருந்தன.

வனத்துறை சார்பில் இயற்கைச் சூழலில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் இருந்து பதப்படுத்தப்பட்ட கேளை ஆடு, வரையாடு, காட்டு மாடு, சிறுத்தைப் புலி, மான், மரக்கட்டையால் உருவாக்கப்பட்ட மலைப் பாம்பு ஆகியன சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளை குதூகலமடையச் செய்தன.

காரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், சுரைக்காய், பாகற்காய், முள்ளங்கி, பூசணிக்காய், கத்திரிக்காய் உட்பட 30 வகை காய்கறிகளைக் கொண்டு செதுக்கி உருவாக்கப்பட்ட டெல்லி குதுப்மினார் தூண், மரத்தின் மேல் 20 வகை பூக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ட்ரீ ஹவுஸ் (மர வீடு) முன் சுற்றுலாப் பயணிகள், இளம்பெண்கள், குழந்தைகள் குடும்பம், குடும்பமாக நின்று செல்ஃபி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மலர் கண்காட்சியை மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். வேளாண் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகம்

கொடைக்கானல் மலர் கண்காட்சி தொடக்க விழாவில் கலந்துகொண்ட சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது: சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த தமிழக அரசு கடந்த ஒரு ஆண்டில் ரூ.178.51 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. `விஷன் தமிழ்நாடு 2323' தொலைநோக்கு திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொடைக்கானல், ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட சுற்றுலா நகரங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகப்படுத்த தமிழக சுற்றுலாத் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக, கொடைக்கானலில் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ஹெலிகாப்டர் தளம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x