Published : 09 May 2015 08:07 AM
Last Updated : 09 May 2015 08:07 AM
கோவை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற ஐந்து மாணவ, மாணவிகள் பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்படிப்பு படிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
கோவை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்டு, தற்போது பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்றுள்ள விக்னேஷ்குமார், மணிகண்டன், மணிமேகலை, வினிதா, கவுசல்யா ஆகிய மாணவ, மாணவிகளை பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்.
இந்த மாணவ, மாணவிகள் `தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது.
மணிமேகலை
“அப்பா கூட செங்கல்சூளைக்கு வேலைக்குப் போனபோது குழந்தைத் தொழிலாளர் என்று மீட்கப்பட்டேன். பள்ளியில் சேர்த்தாங்க. இன்னெய்க்கு வரைக்கும் உதவி புரிஞ்சாங்க. 995 மதிப்பெண் எடுத்தேன். எங்க குடும்பத்துல மூணு பொண்ணுக. எங்க அக்கா பிளஸ் 2 படிச்சா. தங்கச்சி 5-வது படிச்சிட்டிருக்கா. நான் டிகிரி படிச்சு டீச்சர் ஆகணும்ன்னு ஆசை. அதுக்கு அப்பா, அம்மா செங்கல் சூளை வேலைக்குப் போய் படிக்க வைக்க முடியும்ங்களா?”
விக்னேஷ்குமார்
“நான் 925 மதிப்பெண் பெற்றுள்ளேன். அப்பா, அம்மா ரெண்டு பேருமே செங்கல்சூளையில் வேலை. அவங்கக்கூட வேலை செஞ்சபோது என்னை கோவை கிளாஸ் டீச்சர்ஸ் மீட்டு பயிற்சி கொடுத்து பள்ளிக்கூடத்துலயும் சேர்த்தினாங்க. தேவையான உதவிகளும் செஞ்சாங்க. இப்ப மழை பெய்யறதால செங்கல்சூளையில் அப்பா அம்மாவுக்கு வேலை இல்லை. அதனால வரும்படியும் இல்லை. இப்ப பக்கத்துல இருக்கிற கல்லூரியில சேர்ந்து பிஎஸ்சி கணக்குப் பாடம் படிக்க எனக்கு ஆசை. ஆனா பணம் கட்ட காசில்லைன்னு அப்பா, அம்மா சொல்றாங்க. என்ன செய்யறதுன்னு புரியலை.”
வினிதா
“அப்பா பார்பர் ஷாப்புல பெரிய வரும்படி இல்லை. அம்மா செங்கல்சூளை வேலை. அதுவும் மழையால நின்னு கிடக்குது. என்னையும் என் அக்காவையும் சூளை வேலை செய்யும்போதுதான் `கோவை கிளாஸ்’ மீட்டாங்க. படிப்பும் சொல்லிக் கொடுத்தாங்க. இப்ப என் அக்கா காலேஜ்ல படிக்கிறா. எனக்கும் படிக்கிறதுக்கு செலவு செய்யறது கஷ்டம்ன்னு அம்மா, அப்பா சொல்றாங்க. 892 மதிப்பெண் எடுத்திருக்கேன். காலேஜ்ல பிபிஏ படிக்க ஆசை.”
எஸ்.மணிகண்டன்
“எனக்கு தங்கச்சிக 2 பேர், அப்பா இல்லை. அம்மா மட்டும். எங்க அம்மா தேங்காய் சுமக்கும் வேலைக்கு போறாங்க. தங்கச்சிக 7-வது 8-வது படிக்கிறாங்க. இந்த நிலையில் நானும் வேலைக்கு அம்மாகூட போய்த்தான் குடும்பத்தை காப்பாத்திட்டு வந்தேன். அதிலிருந்து மீட்டு படிக்க வச்சாங்க. இப்ப 888 மதிப்பெண் எடுத்திருக்கேன். பிகாம் படிக்க ஆசை. ஆனா எங்க அம்மா தேங்காய் சுமக்கிற கூலியில எப்படி பீஸ் கட்டுவாங்க”
கவுசல்யா
“அப்பா, அம்மாவுக்கு மண்டபம் மண்டபமா போயி சமையல் வேலை. நான் சமையல் உதவிக்கு இருந்தபோதுதான் குழந்தை தொழி லாளின்னு சொல்லி அதிலிருந்து மீட்டு படிக்க வச்சாங்க. இப்ப 970 மதிப்பெண் எடுத்திருக்கேன். பிஏ இங்கிலீஸ் படிக்க ஆசை. எனக்கு தங்கச்சி ஒண்ணு. அவ 9-வது படிக்கிறா. அதோட என்னை பிஏ படிக்க வைக்கிறது கஷ்டம்ன்னு சொல்றாங்க அம்மா.”
கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மைய திட்ட இயக்குநர் விஜயகுமார் கூறியதாவது: இவர்கள் பட்டப்படிப்பு பயில மத்திய அரசு ரூ.6000 வரை உதவி புரிகிறது. அதை பெற்றுத் தர மாநில, மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம். அது வரும் வரை இவர்கள் சமாளிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT