Published : 01 May 2015 07:27 AM
Last Updated : 01 May 2015 07:27 AM
கடந்த ஆண்டு மே 1-ம் தேதி, இதே நாள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் தீவிர வாதத்துக்கு இரையானார் இளம் பெண் ஸ்வாதி. குற்ற வாளிகள் இன்னமும் பிடிபட வில்லை. இழப்புத் துயரில் இருந்து மீளவில்லை அவரது குடும்பம். ஆந்திர மாநிலம் குண்டூரில் இருக்கும் ஸ்வாதியின் குடும்பத்தினரை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.
ஸ்வாதியின் தந்தை பரிசூரி ராமகிருஷ்ணன் தாய் காமாட்சி தேவி ஆகியோரின் முகங்களில் இன்னமும் சோக ரேகை மறையவே இல்லை. மகள் இறந்தது முதல் யாரிடமும் பேசுவதில்லையாம் தந்தை. மகளின் படத்துக்கு முன்பாக தியானம் செய்துவிட்டு பேசத் தொடங்கினார் காமாட்சி தேவி.
“முதல் ஆறு மாதங்கள் பெரும் துயரத்தில் இருந்தோம். நினைவுகளின் வலிகளால் துடித்துப் போனோம். அவள் இல்லாத உலகை கற்பனை செய்ய இயலவில்லை. எல்லோரும் செத்துவிடலாமா என்றுகூட யோசித்தோம். ஆனாலும், ஏதோ ஒன்று தடுத்தது. அது அவளது ஆன்மாவாக இருக்கலாம்.
கடைசியாக ஸ்வாதி என்னிடம் ஏதோ பேச ஆசைப்பட்டாள். ரயிலுக்கு கிளம்பும்போது போன் செய்தாள். நான் கல்லூரி கூட்டத்தில் இருந்ததால் அப்புறம் பேசுகிறேன் என்று வைத்துவிட்டேன். அதுதான் கடைசியாக என் மகளிடம் நான் பேசியது. இப்போது ஒரு நிமிடம் பேசியிருக்கலாமே என்று அந்த ஒரு நிமிடத்துக்காக ஒவ்வொரு நிமிடமும் கதறுகிறேன். என் மகள் எனக்கு நிறையக் கற்றுத் தந்திருக்கிறாள். எனக்கு தியானம் சொல்லிக் கொடுத்தது அவள்தான்.
பள்ளியில் அவள்தான் முதல் மாணவி. எம்.டெக்கில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். அவள் வேலைக்குச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்க வேண்டிய தலைமை பொறியாளர் பதவி, அவளுக்கு உடனே கிடைத்தது. அவள் வாழ்க்கையில் எல்லாமே சீக்கி ரமாக நடந்துவிட்டது. மரணமும் கூட’’ என்று சொல்லி பெருமூச்சு விட்டவர் மேலும் தொடர்ந்தார்.
‘‘அவள் ஒரு பையனை காதலித்திருக்கிறாள். இறப்பதற்கு ஒரு வாரம் முன்புதான் என்னிடம் சம்மதம் கேட்டாள். பையன் என்ன சாதி, மதம் என்றேன். உன் குருவும் நீ வணங்கும் அன்னையும் சாதி, மதத்தைதான் கற்றுத் தந்தார்களா என்று என்னைத் திருப்பிக் கேட்டாள். திருமணத்துக்கு சம்மதித்தேன். பாவம், அந்தப் பையனும் இன்னும் துயரத்தில் இருந்து மீளவில்லை.
அவள் இறந்த பிறகு தமிழகத்தில் இருந்து பேசிய ஒரு போலீஸ் அதிகாரி, ‘உங்கள் பெண் தெய்வத்தின் குழந்தை. வெடிகுண்டு வெடிக்கத் தொடங்கியவுடனேயே உங்கள் மகள் அந்த வெடிகுண்டுவின் மீது குப்புற விழுந்துவிட்டாள். குண்டு மொத்தமும் அவரது நெஞ்சுக்குள் புதைந்து வெடித்திருக்கிறது. இல்லையெனில் அந்தப் பெட்டியில் இன்னும் நிறைய பேர் இறந்திருப்பார்கள்’ என்றார். ஆமாம், ஸ்வாதி தெய்வத்தின் குழந்தைதான்!’’ என்றார் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT