Published : 14 May 2015 04:47 PM
Last Updated : 14 May 2015 04:47 PM
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொது இ-சேவை மையங்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இணையத் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக இரண்டு வாரங்களுக்கு மேலாக பணிகள் நடைபெறாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் மின் ஆளுமைத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்களுக்கான சேவைகளை மின் ஆளுமையின் கீழ் கொண்டு வருவதற்கான இத்திட்டம், அனைத்துப் பகுதிகளிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வருவாய்த்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்கள், நலத் திட்டங்கள், உதவித்தொகைகள் இத் திட்டம் மூலம் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு சேவைகளை எளிதாக வழங்க அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பொது இ-சேவை மையங்களை அமைத்துள்ளனர்.
பொள்ளாச்சி தாலுகாவில் கிராம வாரியாக 25 மையங்களும், நகரை ஒட்டியுள்ள மக்களுக்கு ஏதுவாக தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், பாலகோபாலபுரம் பள்ளி என மொத்தம் 28 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலமாகவே வருவாய்த் துறை சான்றிதழ்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், ஆனைமலை பகுதியில் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், காளியாபுரம், சேத்துமடை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள இ- சேவை மையங்களில் இணையத் தொடர்பு பிரச்சினை காரணமாக கடந்த 2 வாரங்களாக பணிகள் முடங்கியுள்ளன. இணையம் மூலம் தகவல்களை பதிவேற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதால், பொதுமக்களிடமிருந்து விண்ணப் பங்கள் வாங்குவதில்லை என இ-சேவை மைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளன. இந்த முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதில், முதல் பட்டதாரிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று உள்ளிட்டவற்றை சமர்பித்தால் மட்டுமே கல்லூரி கலந்தாய்வுகளில் பங்கேற்க முடியும் என்ற சூழல் உள்ளது. இந் நிலையில் கிராமப்புற இ- சேவை மையங்கள் பல நாட்களாக செயல்படாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இ-சேவை மைய பணியாளர் ஒருவர் கூறும்போது, ‘தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலேயே, இ- சேவைக்கான பகுதியும் உள்ளது. அதில் விண்ணப்பதாரரின் விவரங்களை பதிவு செய்தால், முடிவு கிடைக்க தாமதமாகிறது.
திடீரென இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக யாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வாங்குவதில்லை. இது குறித்து எங்களுக்கு பயிற்சி அளித்தவர்களிடம் தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. தினமும் ஏராளமான மாணவர்கள் இ- சேவை மையத்துக்கு வந்து திரும்பிச் செல்கின்றனர்’ என்றார்.
மின் ஆளுமைத் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பொள்ளாச்சி சார் ஆட்சியருமான ரஷ்மி சித்தார்த் ஜகடே கூறும்போது, ‘எங்களிடம் எந்த புகாரும் வரவில்லை. ஒருவேளை மாவட்ட ஆட்சியரகத்துக்கு தெரிவித்திருப்பார்கள். பிரச்சினை என்ன எனத் தெரிந்துகொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
பொள்ளாச்சி வட்டாட்சியர் சண்முகராஜன் கூறும்போது, ‘இணைய இணைப்பில் பிரச்சினை இருப்பதாக தகவல் வந்தது. ஆனால் அது சரி செய்யப்பட்டுவிட்டது. அந்த பிரச்சினை இன்னும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்தால் எல்காட் மேலாளரிடம் பேசி சரி செய்கிறோம்’ என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT