Published : 11 May 2014 11:58 AM
Last Updated : 11 May 2014 11:58 AM
முதுமையில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் பற்றி முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் ஆலோசனை வழங்குகிறார்.
முதுமையில் உணவு முறைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம் மிதமான, சீரான உடற்பயிற்சிகள். முதுமையில் வயது மூப்பு காரணமாக 33% பிரச்சினையும், நோயினால் 33% பிரச்சினையும், உடல் உறுப்புகளை சரியாக பயன்படுத்தாததால் 33% பிரச்சினையும் ஏற்படுகின்றன என்கிறது மருத்துவம். முதுமையில் உடல் உறுப்புகளை சீராக உபயோகப்படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கலாம். உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்தால் உடல் பலவீனமாகி விடும்.
முதுமையில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சியினால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்பு, உடல் பருமனை குறைக்கலாம். இதயத் தாக்குதல், மலச்சிக்கலை தவிர்க்கலாம். உடற்பயிற்சி எலும்புகளை உறுதிப்படுத்தும். நல்ல தூக்கத்தை கொடுக்கும். மனநலம் சீராக இருக்கும். எந்த மருந்து, மாத்திரையும் கொடுக்காத ஆரோக்கியத்தை உடற்பயிற்சி கொடுக்கிறது.
தினமும் ஒரு மணி நேரம் வீதம், வாரத்துக்கு 5 மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஓரளவு விரைவான நடைப் பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், வேகமாக ஓடக்கூடாது. இரண்டு கி.மீ. முதல் 5 கி.மீ. வரை நடைப்பயிற்சி செய்யலாம். இதன் மூலம் இதயத் தாக்குதலை 50 சதவீதம் தவிர்க்கலாம். நடைப்பயிற்சியை வெறும் வயிற்றில் செய்யக் கூடாது. டீ, காபி, பால் போன்ற ஏதாவது ஒன்றை குடித்துவிட்டு நடைப்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக, நீரிழிவு நோய் உள்ளவர்கள் நடைப்பயிற்சியின் போது சாக்லெட், சர்க்கரை, இனிப்பு மிட்டாய் போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும். மயக்கமாக உணர்ந்தால் உடனே இனிப்பு சாப்பிடவும்.
நடைப்பயிற்சிக்கு செல்லும் முதியவர்கள் கட்டாயம் தங்களுடைய பெயர், வயது, முகவரி, என்ன நோய், சாப்பிடும் மாத்திரை, அவசரத்துக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி, அலைபேசி எண் ஆகிய தகவல்களை ஒரு அட்டையில் எழுதி சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். அதை வியர்வையில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பார்வை குறைபாடு, பக்கவாதம், மூட்டு வலி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வெளியே செல்ல வேண்டாம். வீட்டுக்கு உள்ளேயே காலை, மதியம், மாலையில் தலா 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம். வயதான பெண்கள் தரையில் படுத்து ஆசன பயிற்சிகளை செய்யலாம். முதியவர்களுக்கு வைட்டமின் ‘டி’ குறைவாக இருக்கும். வைட்டமின் ‘டி’ எலும்புகளை வலுவடைய செய்கிறது. அதனால் காலை 7 மணி, மாலை 5 மணிவாக்கில் நடைப்பயிற்சி செய்யலாம்.
தீவிர உடற்பயிற்சி கூடாது. உடற்பயிற்சியின்போது நாடித்துடிப்பு 120-க்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சியின்போது இதயத்தில் படபடப்பு, இதயத்தில் வலி, மூச்சு விடுவதில் சிரமம், அளவுக்கு அதிகமான வியர்வை, உடல் ஜில்லிடுதல் மற்றும் மூட்டு வலி ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை சந்தியுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT