Published : 10 Mar 2014 04:31 PM
Last Updated : 10 Mar 2014 04:31 PM

மோடி பிரதமராக திமுக ஆதரவு தருமா?: கருணாநிதி பேட்டி

மதச்சார்பற்ற ஒரு கட்சி இந்தியாவின் ஆளுங்கட்சியாக வருவதைத் தான் நானும், என் தலைமையிலான திமுகவும் விரும்புகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

மோடிக்கு ஆதரவளிப்பீர்களா என்ற கேள்விக்கு, தனிப்பட்ட ஒருவரைக் குறிப்பிட்டு, ஆதரிப்பீர்களா மாட்டீர்களா என்றெல்லாம் என்னிடத்திலே பதில் பெறுவது சரியல்ல என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் > திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

2014ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை உங்கள் முன்னால் எடுத்து வைக்கிறேன். இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள், வெற்றி வாகை சூடுமாறு வாழ்த்துகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கத்திலிருந்து இதுவரையில் ஒவ்வொரு அசைவும் ஜனநாயக ரீதியில் நடைபெறுகின்ற ஒரு இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்தின் சார்பில், 2014ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பட்டியலை உங்கள் முன் வைக்கிறேன். ஆனால் இந்த வேட்பாளர் பட்டியல் பற்றி தமிழ்நாட்டில் உள்ள சில ஏடுகள் தங்கள் விருப்பம் போல் எந்தெந்த பட்டியலில் யார் யார் இடம் பெறுகிறார்கள், எந்தெந்த கட்சிகள் இடம் பெறுகின்றன என்பதை அவரவர்களுடைய ஆசைக்கும், யூகத்திற்கும் தகுந்தவாறு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் இப்போது படிக்கின்ற இந்தப் பட்டியல் முற்றிலும் முழுமையானது என்று நான் சொல்ல மாட்டேன். ஒன்றிரண்டு திருத்தங்கள் வரக்கூடும். வந்தால், தலைமைக் கழகத்தின் சார்பில், அந்தத் திருத்தங்களை வெளியிட்டு, அதுவும் இந்தப் பட்டியலில் இணைக்கக் கூடும்.

இந்தத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் தோழமைக் கட்சிகளுக்கு 5 தொகுதிகள் பங்கிட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மீதி 35 தி.மு.கழக வேட்பாளர்களில், 34 பேர் பட்டதாரிகள். அதில் வழக்கறிஞர்கள் - 13 பேர்; டாக்டர்கள் - 3 பேர்; பொறியாளர் - ஒருவர்; முதுகலைப் பட்டதாரிகள் - 8 பேர்; இளங்கலைப் பட்டதாரிகள் - 7 பேர்; கடந்த முறை எம்.பி.க்களாக இருந்தவர்கள் - 8 பேர். புதிதாக இந்தத் தேர்தலில் போட்டியிடுவோர் - 27 பேர்; பெண்கள் - 2 பேர்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற இருக்கிறதா?

பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கலாம். ஆனால் நாங்கள் அது பற்றி எந்தச் செய்தியும் சொல்ல முடியாத நிலையிலே இருக்கிறோம்.

உங்கள் வேட்பாளர்களில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதா?

பட்டியல் உங்கள் கையிலே இருக்கிறது. விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அவர்களை நீங்கள் சந்தித்தால், இளைஞரா, முதியவரா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

கூடுதலாக கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா? இடதுசாரிகள் வரவிருக்கிறார்களா?

நாங்கள் வர வாய்ப்பில்லை என்று "சாரி" சொல்ல மாட்டோம்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதா? யாராவது தொடர்பு கொண்டார்களா?

இதுவரை அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை. பத்திரிகைகள் வாயிலாக அவர்கள் வரக் கூடிய செய்தி வந்து கொண்டிருப்பதை நான் அறிவேன்.

மு.க. அழகிரி தனிக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக இன்று பேசியிருக்கிறாரே?

இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களை அறிவிக்கும் கூட்டம். எனவே தேவையற்ற கேள்விகளையெல்லாம் கேட்டு, என்னைப் புண்பட வைக்காதீர்கள். அவ்வளவு தான் சொல்வேன்.

தேர்தல் அறிக்கை எப்போது வைக்கப்படும்?

நாளை.

பிரச்சாரம் எப்போது தொடங்குகிறீர்கள்?

வாய்ப்பான தேதியும், வழிகளும், ஊர்களும் பட்டியலிட்ட பிறகு அறிவிக்கப்படும்.

பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது. வந்தால் அ.தி.மு.க.வின் நிலை எவ்வாறு இருக்கும்?

அந்தத் தீர்ப்பைப் பற்றி நான் இப்போது சொல்வது நீதி நெறிக்கு, சட்ட முறைக்கு ஏற்றதல்ல.

உச்ச நீதி மன்றத்தில் இன்றைக்கு அளித்துள்ள ஒரு தீர்ப்பில், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தத் தீர்ப்பு ஜெயலலிதா மீதான இந்த வழக்கிற்குப் பொருந்தும் என்று நினைக்கிறீர்களா?

இது ஏறத்தாழ பதினைந்து ஆண்டுக் காலமாக நடைபெறுகின்ற வழக்கு. இப்போது பெங்களூரில் நடைபெறுகிறது. பெங்களூர் வந்த பிறகு தள்ளாடுகிறது. விரைவில் வழக்கு முடியுமென்று நம்புகிறேன்.

இடதுசாரிகளின் பேச்சுவார்த்தைக்கு ஏதாவது காலக் கெடு வைத்திருக்கிறீர்களா?

ஒரு ஜனநாயகக் கட்சியில், அதுவும் திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஒரு நல்ல, நேர்மையான, நியாயமான அணுகுமுறையை நட்பு ரீதி யில் கடைப்பிடிக்கின்ற ஒரு இயக்கத்தில், கண்டிப்பாக இந்தத் தேதிக்குள் நீங்கள் வர வேண்டுமென்று நான் யாரையும் வற்புறுத்த முடியாது.

திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தலில் எந்தெந்த பிரச்சினைகளை முன் வைத்து மக்களிடம் வாக்குகளை கேட்கும்?

நாளைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்படவிருக்கிறது. அதை நீங்கள் படித்துப் பார்த்தால், திராவிட முன்னேற்றக் கழகம் எதை வைத்து மக்களை இந்தத் தேர்தலில் அணுகப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு, பா.ஜ.க. வின் மோடி பிரதமராக வாய்ப்பு ஏற்பட்டால் நீங்கள் அதை ஆதரிப்பீர்களா?

மதச்சார்பற்ற ஒரு கட்சி இந்தியாவின் ஆளுங்கட்சியாக வருவதைத்தான் நானும் என் தலைமையிலே உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் விரும்பும். தனிப்பட்ட ஒருவரைக் குறிப்பிட்டு, அவரை நீங்கள் ஆதரிப்பீர்களா, மாட்டீர்களா என்றெல்லாம் என்னிடத்திலே பதில் பெறுவது என்பது சரியல்ல.

மோடி அலை வீசுவதாகக் கூறப்படுகிறதே?

எனக்குத் தெரிந்தவரையில் இங்கே வங்காள விரிகுடா அலையைத் தான் காண முடிகிறது.

மூன்றாவது அணிக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது, அதிலே தி.மு.க.வின் பங்கு என்னவாக இருக்கும்?

ஜனநாயக ரீதியில் மதச்சார்பற்ற வகையில் எந்த அணி அமைந்தாலும், அதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு இருக்கும்.

இரண்டொரு வேட்பாளர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கின்றன. அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

உண்மையில் அவர்கள் மீது குற்றச்சாட்டு இருக்கிறது என்று நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? போடப்பட்ட வழக்குகள் எல்லாம் இப்போது ஆடிக் கொண்டிருக்கின்றன. அந்த வழக்குகளை நிரூபிக்கக் கூடிய சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

பெண்களுக்கு வேட்பாளர் பட்டியலில் மிகக் குறைந்து இடங்கள், அதாவது இரண்டு இடங்கள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறதே?

ஒரு பெண் இருந்தே நாட்டை ஆட்டுவிக்கிறார்கள் என்றால் (சிரிப்பு)

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தந்தது அ.தி.மு.க. தான் என்றும், நீங்கள் வாங்கித் தரவில்லை என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

தேர்தல் பிரச்சாரத்தில் இப்படிப் பொய் சொல்வது அந்த அம்மையாருக்குக் கை வந்த கலை.

சேனல் ஃபோரில் ஒரு படத்தை நேற்று வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பெண்கள் கற்பழித்து, கொலை செய்யப்பட்டு, அவர்களின் பிணங்களின் மீது இலங்கை ராணுவம் செல்வதெல்லாம் காட்டப்பட்டிருக்கிறதே?

இது போன்ற ஆவணப் படங்கள் ஏற்கனவே வெளி வந்தது. அந்தப் படங்களிலேயே இலங்கை அரசின் கவனத்திற்கும், குறிப்பாக நம்முடைய இந்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அது பற்றி தி.மு. கழகம் இடம்பெற்றிருக்கின்ற டெசோ அமைப்பின் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, வெளிநாட்டு தூதுவரகங்களிலும், ஐ.நா. சபையிலும் நம்முடைய பொருளாளர் மு.க. ஸ்டாலின், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு போன்றவர்கள் எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x