Published : 04 May 2015 06:12 PM
Last Updated : 04 May 2015 06:12 PM
ஆம்பூரில் தாலுகா அளவிலான அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும் அதற்கான வசதிகள் போதுமானதாக வழங்கவில்லை. அதேநேரம், தேசிய தரச்சான்று பெறுவதற்கான நடவடிக்கையில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டாலர் சிட்டி நகரமாக ஆம்பூர் உள்ளது. தோல் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்வதால் இந்தியாவுக்கான அன்னியச் செலாவணி ஈட்டுவதில் இந்த நகரம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
ஆம்பூர் பஜார் வீதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 1,300 முதல் 1,500 பேர் புறநேயாளிகளாக தினமும் வந்து செல்கின்றனர். 109 படுக்கை வசதியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகா அளவிலான அரசு மருத்துமவனையாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், தரம் உயர்த்திய தாலுகா அரசு மருத்துவமனைக்குரிய எந்த வசதிகள் இல்லை என்று புகார் கூறப்படுகிறது.
மருத்துவர்கள் பற்றாக்குறை
தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்திய இங்கு, மயக்கவியல் நிபுணர், மகப்பேறு மற்றும் குடும்பநல மருத்துவர் ஒருவர்கூட இல்லை. இதனால், பிரசவத்துக்கு வருபவர்களை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் அவல நிலை காணப்படுகிறது. 20 டாக்டர்கள் இருக்க வேண்டிய இங்கு 12 பேர் மட்டுமே உள்ளனர். செவிலியர்கள், மருத்துவப் பணியார்கள் என அனைத்து மட்டத்திலும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மகப்பேறு மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னமும் பொறுப்பேற்றகவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு சுகாதார இயக்க திட்டத்தின்கீழ் இங்கு தொற்றா நோய் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின்கீழ் மருத்துவ மனை முழுவதும் கணினிமயமாக்கப் பட்டுள்ளது. மருத்துவமனைக்குள் நேயாளிகள் வந்தது முதல் அவர்களுக்கு தேவைப்படும் சிகிச்சை, கொடுக்கப்படும் மருந்துகளின் விவரம், எத்தனை நாள் சிகிச்சை அளிக்க வேண்டும், நோயாளி எப்போது வீடு திரும்புவார் என்பதை தெளிவாக பதிவு செய்கின்றனர்.
எனவே, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு குறைந்தபட்சம் தேசிய தரச்சான்றாவது பெறவேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். விரைவில் தரச்சான்றுக்கான ஆய்வு கோரி விண்ணப்பிக்க உள்ளனர்.
இதுதொடர்பாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷாவை தொடர்புகொண்டு கேட்டதற்கு, ‘‘ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சீமாங் மையம் இல்லை. மயக்கவியல் நிபுணர், மகப்பேறு, கண், காது மூக்கு தொண்டை நிபுணர் என யாரும் இல்லை.
மருத்துவமனைக்கு ஏசி வசதியுடன் அண்டர் கிரவுண்டில் பிணவறை வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். இதுவரை அரசின் பரிசீலனையில்தான் உள்ளது. அதுபோல, புதிய கட்டிடங்கள் கட்ட நிதியும் ஒதுக்கவில்லை.
ரூ.30 லட்சம் மற்றும் ரூ.10.50 லட்சம் என எம்எல்ஏ தொகுதி நிதியில் கட்டிய கட்டிடம் மட்டும் மருத்துவமனைக்கு என்று உள்ளது. தொழிலாளர்கள் நிறைந்த இந்த அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் வழங்கி நவீனப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT